ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்தியா கூட்டணி 295 இடங்களைக் கைப்பற்றும்! – ராகுல் நம்பிக்கை

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி 295 இடங்களை கைப்பற்றும் என்று கூறியுள்ள ராகுல் காந்தி, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (ஜூன் 4) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதற்கிடையே, நேற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், நேற்று மாலை முதலே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளி வரத் தொடங்கிவிட்டன. இதில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியே மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.

ஓரிரு எக்ஸிட் போல்கள் மட்டுமே தொங்கு நாடாளுமன்றம் அமையும் அல்லது இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறியுள்ளது.

இந்த நிலையில், மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டுள்ள வேட்பாளர்களுடன் இன்று, அக்கட்சியின் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோர் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களுடன் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை குறித்து கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். அவர் பேசியதாவது, “இது மோடியின் ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு, இது மோடியின் கற்பனைக் கணிப்பு” என்று காட்டமாகப் பேசியுள்ளார்.

இந்தியா கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்பது குறித்து பேசிய ராகுல் காந்தி, “பாடகர் சித்து மூஸ் வாலாவின் ’295’ பாடலை மேற்கோள் காட்டி, 295 இடங்களில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறும்” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com