பிரதமர் மோடி
பிரதமர் மோடி

சனாதனத்தை ஒழிக்கப் பார்க்கும் இந்தியா கூட்டணி! – பிரதமர் மோடி தாக்கு!

சனாதனத்தை ஒழிக்க, இந்தியா கூட்டணி விரும்புகிறது என்று கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அது திமிர்பிடித்த கூட்டணி என்றும் விமர்சித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமூகநீதிக்கு எதிராக இருக்கும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றார். அடுத்த சில தினங்கள் கழித்து, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “ சனாதனப் பேச்சுக்கு சரியான பதில் கொடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் ரூ. 49,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர், பேரணியில் பேசிய அவர், ”இந்தியா கூட்டணி சனாதனத்தை ஒழிக்க விரும்புகிறது. அது திமிர்பிடித்த கூட்டணி. சில அரசியல் கட்சிகள், நாட்டையும் சமூகத்தையும் சிதைப்பதில் ஈடுபட்டுள்ளன. அவர்கள் ஒன்றாக இணைந்து உருவாகியதுதான் இந்தியா கூட்டணி.” என்று விமர்சித்தவர், இந்தியா கூட்டணியை ‘இண்டி கூட்டணி’என்றே குறிப்பிட்டுப் பேசினார்.

மேலும், “இந்தியாவின் கலாச்சாரத்தை, மத நம்பிக்கையைச் சிதைப்பதற்கான ரகசியத் திட்டம் அவர்களிடம் உள்ளது. சனாதனத்தை ஒழிக்க இந்தியா கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நாட்டை மீண்டும் ஆயிரம் வருட அடிமைத்தனத்திற்குத் தள்ள சனாதனத்தை ஒழிக்க நினைக்கிறார்கள். அவர்களைக் கூட்டாக அழிக்க வேண்டும்.” என்று பிரதமர் மோடி பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com