வாட்சாப்பில் பயனரின் எண்ணுக்குப் பதிலாக பெயரை வைத்து பயன்படுத்தும் புதிய அம்சத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த மத்திய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.
இந்த புதிய வசதி தொடர்பாக விரிவான விளக்கத்தை அளிக்குமாறு மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
புதிய அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களது மொபைல் எண்ணைப் பகிராமல், பயனர் பெயரை மட்டும் பயன்படுத்தி மற்றவர்களுடன் தொடர்புகொள்ள முடியும். இது தனிநபரின் உரிமையை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டதாக மெட்டா நிறுவனம் தெரிவித்தது.
ஆனால், இந்த அம்சம் அறிமுகமானால் அரசுத் துறைகள், வங்கிகள், பிரபலங்களின் பெயர்களைப் பயன்படுத்தி மோசடி, சைபர் குற்றங்கள், டிஜிட்டல் அரெஸ்ட் உட்பட்ட இணையக் குற்றங்கள் அதிகரிக்கக்கூடும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள், பயனர்களைச் சரிபார்க்கும் முறை, தவறான பயன்பாட்டைத் தடுக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றை குறித்து விளக்கம் அளிக்க மெட்டாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசின் ஆய்வும் ஆலோசனைகளும் நிறைவடையும் வரை இந்தியாவில் இந்த புதிய பயனர் பெயரைப் பயன்படுத்தும் அம்சத்தை அறிமுகப்படுத்தவும் கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், அரசு அமைப்புகள், பிரபலங்களின் பயனர் பெயர்கள் பாதுகாக்கப்படும், போலி கணக்குகளைக் கண்டறிய பல அடுக்கு பாதுகாப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக வாட்ஸாப் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த அம்சத்தை விரும்புபவர்கள் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வாட்சாப் விளக்கம் அளித்துள்ளது.
இருப்பினும், இதுகுறித்து முழுமையாக ஆய்வுசெய்த பிறகே அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.