போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த 5 பேரை, இந்திய கடலோரக் காவல்படை கைது செய்துள்ளது.
இந்திய கடலோரக் காவல்படையும், குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படையும் இணைந்து அரபிக்கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஈரானைச் சேர்ந்த படகை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அந்தப் படகில் பாகிஸ்தானைச் சேர்ந்த 5 பேர், ரூ. 3000 கோடி மதிப்புள்ள 526 கிலோ ஹெராயின், மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள்கள் கடத்தியது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, போதைப்பொருள், படகை பறிமுதல் செய்த இந்திய கடலோரக் காவல்படையினர், பாகிஸ்தானைச் சேர்ந்த 5 பேரையும் மும்பைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்த அறிக்கையை இன்று வெளியிட்ட இந்திய கடலோரக் காவல்படை, இந்தியாவின் கடல் எல்லைகள், விரிவாக்கப்பட்ட கடல்சார் மண்டலங்களுக்குள் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான நடைமுறை கடைபிடிக்கப்படுவதாக குறிப்பிட்டது.