ஐஎஸ்ஐஎஸ்-க்கு ஆள் சேர்ப்பு… குற்றவாளிக்கு சிறையில் சொகுசு வசதி!

டிவி, செல்போன் பார்க்கும் குற்றவாளிகள்
டிவி, செல்போன் பார்க்கும் குற்றவாளிகள்
Published on

பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொலை, பலாத்கார, தீவிரவாத குற்றவாளிகள் டிவி பார்த்தவாறு செல்போனில் பேசுவது போன்ற வீடியோ ஆதாரங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பெங்களூருவை அடுத்துள்ள பரப்பன அக்ரஹாராவில் கடந்த 1997ஆம் ஆண்டு 138 ஏக்கர் பரப்பளவில் மத்திய சிறை கட்டப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோரும் இந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது சசிகலா சீருடை அணியாமல் ஷாப்பிங் சென்று வருவது போன்ற வீடியோவும், டிவி, தனி சமையலறை ஆகியவற்றுடன் சொகுசாக இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷன் தனது நண்பர்களுடன் செல்போனில் பேசுவது போன்ற வீடியோ வெளியானது. அதேபோல பிரபல ரவுடிகள் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடுவது போன்ற வீடியோவும் வெளியானது.

தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொலை தண்டனை கைதி உமேஷ் ரெட்டி 2 செல்போன்களை கையில் வைத்துக்கொண்டு பேசுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. 1997 - 2022 காலகட்டத்தில் 20 பெண்களை பலாத்காரம் செய்து, அதில் 18 பேரை கொலை செய்ததாக வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளன. இதில் ஒரு சில வழக்குகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவர், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல 19 கிலோ தங்க கடத்தல் வழக்கில் கைதான தருண் ராஜ், தனது அறையில் சோஃபாவில் அமர்ந்து டிவி பார்ப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இதுதவிர ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக கைதான ஜுஹாப் ஹமீத் ஷக்கீல் செல்போனில் பேசுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

இதுதவிர வேறு சில கொலை, கொள்ளை, பலாத்கார வழக்கின் தண்டனை கைதிகளும் செல்போனில் பேசுவது போன்ற புகைப்படங்களும், சிகரெட் புகைப்பது போன்ற புகைப்படங்களும் கன்னட ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

logo
Andhimazhai
www.andhimazhai.com