இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போா் காரணமாக விமான சேவையை வரும் அக்டோபர் 14 ஆம் தேதி வரை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது.
இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக டெல் அவிவ் நகருக்கு, வரும் 14ஆம் தேதி வரை விமான சேவையை ரத்து செய்வதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. டெல்லியில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு வாரந்தோறும் 5 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்கி வரும் நிலையில், பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.