
நேருவால்தான் வந்தே மாதரம் நாட்டின் தேசிய கீதமாக ஏற்கப்படாமல் போனது என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா குறித்த விவாதம் இன்று நடைபெற்றது. இந்த விவாதத்தை பிரதமர் மோடி இன்று மக்களவையில் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: “வருங்கால சந்ததிகளுக்கு வந்தே மாதரம் வழிகாட்டியாக இருக்கும்.
வந்தே மாதரத்தின் பெருமையை பறைசாற்றும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. வந்தே மாதரம் இயற்றப்பட்ட போது நாடு அடிமைச்சங்கிலியில் சிக்கியிருந்தது.
ஆங்கிலேயர் ஆட்சியில் பிரிட்டிஷ் மகாராணியாரை கடவுள் காப்பாற்ற வேண்டும் என பாட நிர்பந்திக்கப்பட்டனர்; அதற்கு பதில் தரும் வகையில் வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டது.
வங்கத்தில் ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடித்தது வந்தே மாதரம் பாடல். ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசி கப்பல் இயக்கி தேசப்பற்றை வளர்த்தவர் வ.உ.சிதம்பரனார். தமிழ்க் கவிதைகள் மூலம் ஆங்கிலேய ஆட்சியாளர்களை அலறவைத்தவர் மகாகவி பாரதியார். (தாயின் மணிக்கொடி பாடலை பாடினார் மோடி)
மகாத்மா காந்தியடிகள் வந்தே மாதரம் பாடலை 1905ஆம் ஆண்டு புகழ்ந்தார்; நாட்டின் தேசிய கீதமாக வந்தே மாதரம் பாடல் இருக்க வேண்டும் என்பது காந்தியடிகளின் விருப்பம்.
வந்தே மாதரம் பாடலுக்கு எதிராக வரலாற்றில் மிகப் பெரும் துரோகம் செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களுக்கு எதிராக வந்தே மாதரம் பாடல் இருக்கிறது என 1937ஆம் ஆண்டு ஜின்னா குற்றம் சாட்டினர்; இதனை ஜவஹர்லால் நேரு ஆதரித்தார். நேருவால்தான் வந்தே மாதரம் நாட்டின் தேசிய கீதமாக ஏற்கப்படாமல் போனது.
ஜின்னா தலைமையிலான முஸ்லிம் லீக் கட்சி, வந்தே மாதரம் பாடலுக்கு எதிராக நாடு தழுவிய இயக்கம் நடத்தியது. அப்போது நேருவும் காங்கிரஸ் கட்சியும் வந்தே மாதரம் பாடலை சந்தேகக் கண்ணுடன் பார்த்தனர்.
வந்தே மாதரம் பாடல் பற்றி சுபாஷ் சந்திர போஸுக்கு நேரு எழுதிய கடிதத்தில், இந்த பாடல் முஸ்லிம்களை எரிச்சலூட்டச் செய்யக் கூடியது என குறிப்பிட்டுள்ளார்.
வந்தே மாதரம் பாடல் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்த போது ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்தோம்; அந்த பாடல் நிறைவடைந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்த போது நாடு அவசர நிலையின் கோரப் பிடியில் சிக்கி இருந்தது; அப்போது தேசபக்தர்கள் சிறைக் கொட்டடிகளில் அடைக்கப்பட்டனர்.
வந்தே மாதரம் பாடலின் மகத்துவத்தை தற்போது மீட்டெடுக்க நமக்கு நல்வாய்ப்பு கிடைத்துள்ளது.” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.