
காந்தியடிகளின் பெயரில் இருந்த ஊரக வேலைவாய்ப்பு சட்டத் திட்டத்தை மாற்றியமைத்து புதிய சட்டம் கொண்டுவந்தது வேலைவாய்ப்பை மேலும் மோசமாக்கும் என்று முதலமைச்சரின் பொருளாதார ஆலோசகர் ஜீன் டிரெஸ் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்டு மாநிலம் இராஞ்சியில் ஊரகவேலை கண்காணிப்பு இயக்கத்தின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய பொருளாதார அறிஞர் ஜீன் டிரெஸ், புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள விபி ஜி ராம் ஜி சட்டத்துக்கு எதிராக விரைவில் கூடவுள்ள ஜார்க்கண்டு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்தினார். இதுகுறித்து அரசுத் தரப்பை நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார். கர்நாடகம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இப்படியான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
புதிய சட்டமானது பல்வேறு வழிகளில் ஊரக வேலைவாய்ப்பு உறுதியைச் சீர்குலைக்கிறது என்றும் மைய அரசு எப்போது நினைத்தாலும் இத்திட்டத்தை நிறுத்திக்கொள்ளும் சுவிட்ச் ஆஃப் அம்சத்தைக் கொண்டிருக்கிறது என்றும் இது உறுதிப்படுத்தப்பட்ட வேலை உரிமை எனும் கருத்தாக்கத்துக்கு மாறானது என்றும் அவர் கூறினார்.
மேலும், புதிய சட்டமானது மாநிலவாரியாக நிதி ஒதுக்கீடுகளைத் தீர்மானிக்கிறது என்றும் ஜீன் டிரெஸ் தெரிவித்தார்.
இத்துடன், இது அதிகமான அளவில் டிஜிட்டல்மயத்தைச் சார்ந்திருக்கிறது என்றும், கடந்த கால அனுபவங்களில் டிஜிட்டல்மயம் என்பது தாமதத்துக்கும் கூலியைத் தடைசெய்வதற்கும் தள்ளுபடி செய்வதற்குமே பயன்பட்டுள்ளது என்றும் குறிப்பாக தொலைத்தொடர்பு வசதி குறைவாக உள்ள ஊர்களில் தொழிலாளர்களை இத்திட்டத்திலிருந்து அப்புறப்படுத்தவும் இது வழிசெய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.