ஹேமந்த் சோரன்
ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது: நடந்தது என்ன?

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் 7 மணி நேரம் தீவிர விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், அவரை கைது செய்தனர்.

சட்டவிரோத பணப் பரிமாற்றம், நில மோசடி தொடர்பான வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை பலமுறை சம்மன் அளித்திருந்த நிலையில், கடந்த வாரம் முதல் முறையாக வீட்டிலேயே வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஜனவரி 28, 29ஆம் தேதிகளில் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், கடந்த 27ஆம் தேதி டெல்லிக்கு தனி விமானத்தில் சென்ற முதல்வர் ஹேமந்த் சோரன், அங்கிருந்து ராஞ்சிக்கு ரகசியமாக திரும்பினார். அவர் விமானத்தில் வராமல், தனி காரில் ரகசிய வழியாக வந்துள்ளார்.

இதற்கிடையே, டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீட்டில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.36 லட்சம் ரொக்கம், சொகுசு கார், ஆவணங்கள் சிலவற்றையும் அமலாக்கத் துறை கைப்பற்றியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, ராஞ்சியில் விசாரணை நடத்துவதற்காக நேற்று பிற்பகலில் அமலாக்கத் துறை அதிகாரிகள் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டில் குவிக்கப்பட்டனர். ஆனால், முதல்வரிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

ஏற்கெனவே, ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் அமலாக்கத் துறை அலுவலகத்தை சுற்றி 100 மீட்டர் தொலைவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு துணை ராணுவ படையினர், போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், பிற்பகல் 2 மணி முதல் முதல்வர் ஹேமந்த் சோரனிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 7 மணி நேர விசாரணைக்கு பிறகு, இரவு 8.30 மணி அளவில் அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்து, தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். இதை கண்டித்து ஜேஎம்எம் கட்சியினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com