கர்ப்பம் தரிக்கச்செய்தால் ரூ. 13 லட்சம்: பீகாரில் பிடிபட்ட மோசடி கும்பல்!

கர்ப்பம் தரிக்கச்செய்தால் ரூ. 13 லட்சம்: பீகாரில் பிடிபட்ட மோசடி கும்பல்!

‘இப்படியெல்லாமா குற்றங்களைச் செய்ய முடியும்’ என ஆச்சரியப்படும் அளவுக்கு விதவிதமான இணையக் குற்றங்கள் பெருகி வருகின்றன. இதுவரை நடந்த இணையக் குற்றங்களை ஓவர்டேக் செய்துள்ளது பீகாரில் நடந்த சம்பவம் ஒன்று.

பீகார் மாநிலம் நவாடாவைச் சேர்ந்த கும்பல் ஒன்று ‘ஆல் இந்தியா பிரக்ணன்ட் ஜாப் ஏஜென்சி’ என்ற நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர். அதன் மூலம், குழந்தை இல்லாத பெண்களை கர்ப்பமாக்குவதற்கு ஆண்களை வேலைக்கு எடுப்பதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த கும்பல் வாட்ஸ்அப் மூலமாக ஆண்களைத் தொடர்புகொண்டு, தங்கள் கணவர் மூலமாக குழந்தை பெற இயலாத அப்பாவிப் பெண்கள் தாய்மை அடைய உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அதற்கு இசைவு தெரிவிப்பவர்களை பதிவு கட்டணமாக 799 ரூபாய் செலுத்த வேண்டும்.

பின்னர், அவர்களுக்குப் பல பெண்களின் புகைப்படங்கள் அனுப்பப்படும். அதில் அவர்களே ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதன் பின், அந்த ஆண்கள் பாதுகாப்பு வைப்புத் தொகை செலுத்த வேண்டும். இந்த வைப்புத் தொகையானது அவர்கள் தேர்ந்தெடுத்த பெண்களின் அழகிற்கேற்ப ரூ. 5000 - 20000 ஆயிரம்வரை செலுத்த வேண்டும்.

வேலை வெற்றிகரமாக முடிந்த பின், அதாவது அப்பெண் கருவுற்றால் ஆணுக்கு ரூ. 13 லட்சம் தருவதாகவும், இல்லையெனினும் ஆறுதல் பரிசாக ரூ. 5 லட்சம் தருவதாகவும் கூறியுள்ளனர்.

இந்த நூதன மோசடியில் ஈட்டுப்பட்ட 8 பேரை நேற்று முன்தினம் காவல்துறை கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 9 செல்போன்கள், இரண்டு பிரின்டர்கள் உட்பட பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. தலைமறைவான அந்த கூட்டத்தின் தலைவன் முன்னா குமாரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

காவல்துறையின் விசாரணைக்கு பிறகே, மேலதிக விவரங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com