பெண் ஏட்டை ஒரு எஸ்.ஐ.யே... துப்பாக்கி முனையில் கொடூரம்!
பெண் தலைமைக் காவலரை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்த உதவி காவல் ஆய்வாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு கைதும் செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் காலேஸ்வரம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் பி.வி.எஸ். பவானிசென் கவுட். இவர் அதே காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருக்கக் கூடிய பெண் காவலர் ஒருவரை துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே கட்டத்தின் தரைதளத்தில் பெண் காவலரும் இரண்டாவது தளத்தில் உதவி காவல் ஆய்வாளரும் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி, ஜன்னல் வழியாக பெண் காவலர் வீட்டுக்குள் ஆய்வாளா் நுழைந்துள்ளார். தனியாக இருந்த பெண் காவலரை துப்பாக்கி காட்டி மிரட்டி, அவரை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, இது குறித்து வெளியே சொன்னால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டியுள்ளார்.
இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் காவலர், பூபாலபள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதனுக்கு புகார் தெரிவிக்க, பவானிசென்னை அதிரடியாகப் பணி நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டார்.
மேலும் புகாரின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் மீது ஏற்கெனவே இரண்டு பெண் காவலர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும், இவர் மீது ஏற்கெனவே ஒரு பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக வழக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி இருக்கும்போதும் அந்த ஆய்வாளர் இப்படி நடந்துள்ளார். என்ன ஜென்மமோ?