கன்னட எழுத்தாளருக்கு சர்வதேச புக்கர் விருது!
கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக் எழுதிய “ஹார்ட் லாம்ப்” என்ற சிறுகதைத் தொகுப்புக்கு 2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, ஐக்கிய ராஜ்யம் அல்லது அயர்லாந்தில் வெளியிடப்படும் ஒரு புனைகதை படைப்பு அல்லது சிறுகதைகளின் தொகுப்புக்கு ஆண்டுதோறும் சர்வதேச புக்கர் விருது வழங்கப்படுகிறது.
இதற்கு முன்னர் 2020 ஆம் ஆண்டு “டூம்ப் ஆப் சேன்ட்” என்ற நாவலுக்காக இந்தியாவை சேர்ந்த இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ ஏற்கனவே இந்த விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பானு முஷ்டாக்கின் புக்கர் விருது பெற்ற நூலான “ ஹார்ட் லாம்ப்” என்பது 1990 முதல் 2023க்கு இடையில் வெளியிடப்பட்ட 12 சிறுகதைகளின் தொகுப்பாகும். அவை தென்னிந்தியாவின் முஸ்லிம் சமூக பெண்கள் மற்றும் சிறுமிகளின் அன்றாட வாழ்க்கை அனுபவம் பற்றியது. இதை மொழிபெயர்த்தவர் தீபா பஸ்தி. இந்த பரிசு 50,000 பவுண்டுகள் கொண்டதாகும். இப்பரிசு எழுத்தாளருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.
“இந்த மகத்தான கௌரவத்தை நான் ஒரு தனிநபராக அல்ல, மாறாக பலருடன் இணைந்து எழுப்பப்பட்ட குரலாக ஏற்றுக் கொள்கிறேன்” என்று லண்டனில் உள்ள டேட் மாடர்ன் கேலரியில் நேற்று நடந்த விழாவில் பானு முஷ்டாக் கூறினார்.
பானு முஷ்டாக், ஒரு வழக்கறிஞரும் பெங்களூருவில் உள்ள அகில இந்திய வானொலியில் பணியாற்றியவரும் ஆவார். இந்த மதிப்புமிக்க இலக்கிய விருதைப் பெற்ற முதல் கன்னட மொழி இலக்கிய எழுத்தாளர் என்ற பெருமையை இவர் பெற்றார்.
இதையடுத்து கன்னட இலக்கிய உலகத்தினரும் வாசகர்களும் இவருக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துவருகின்றன. கர்நாடக முதலமைச்சர் சீத்தாராமையா, இது கர்நாடகமே கொண்டாடவேண்டிய நிகழ்வு, கர்நாடகத்தின் பெருமையை பானு முஷ்டாக் சர்வதேச அளவில் நிறுவிஉள்ளார். எனக்கூறி உள்ளார்.