மதுவுடன் கறிவிருந்து வைத்த எம்.பி… வெடித்த சர்ச்சை!
மக்களவைத் தேர்தல் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதமாக பா.ஜ. எம்.பி. ஒருவர் மதுவுடன் கறிவிருந்து கொடுத்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், கர்நாடகாவில் சிக்கபெல்லாபூர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சுதாகர் 1.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக நேற்று கர்நாடகாவின் நெலங்களாவில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் தன் ஆதரவாளர்களுக்கு மதுபாட்டிலுடன் கறிவிருந்து வைத்தார்.
காவல் துறை அனுமதியுடன் நடந்த இந்த விருந்தில், எதிர்க்கட்சி தலைவர் அசோகா உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், பா.ஜ.க., ம.ஜ.க. பிரமுகர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த விருந்தில், மதுபாட்டிலை வாங்க நூற்றுக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கர்நாடக மாநில துணை முதல்வர் சிவக்குமார் கூறுகையில், “இந்த மதுவிருந்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படுவதற்கு முன்னர், கட்சி தொண்டர்களுக்கு மது விருந்து கொடுக்க உங்கள் எம்.பியை எப்படி அனுமதித்தீர்கள்?இது குறித்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பதில் சொல்ல வேண்டும்” என கூறியுள்ளார்.