டாக்டர் சகானா
டாக்டர் சகானா

கேரள பெண் டாக்டர் தற்கொலை - பி.எம்.டபிள்யூ. கார் வரதட்சணை கேட்டு நிர்பந்தித்த காதலன்!

எழுத்தறிவில் முன்னேறிய மாநிலம் எனப் பெயர்பெற்ற கேரளாவில் வரதட்சணை எத்தனையோ இளம்பெண்களைக் காவு வாங்கிக்கொண்டிருக்கிறது. அந்த மாநில குற்ற ஆவணக் காப்பகத் தரவுகளின்படி, இந்த ஆண்டில் அக்டோபர் மாதம்வரை வரதட்சணைக் கொடுமையால் எட்டு பேர் இறந்துள்ளனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாரமூடு பகுதியைச் சேர்ந்தவர், அப்துல் அசீஸ். இவரின் மகள் சகானா (28). எம்.பி.பி.எஸ். முடித்துள்ளார். திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவைச் சிகிச்சைப் பிரிவில் முதுநிலைப் பட்டம் படித்து வரும் சகானா, கல்லூரி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார்.

சஹ்னாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் சகானாவுக்கு இரவுப் பணி இருந்துள்ளது. அவர் பணிக்குச் செல்லாததால் சக மருத்துவர்கள் அவரது அறைக்கு வந்துள்ளனர். அப்போது அறைக் கதவு பூட்டப்படிருந்ததால், அவர்கள் கதவைத் தட்டி சகானாவை அழைத்தனர். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் அவர் கதவைத் திறக்கவில்லை.

அதனால் கதவை உடைத்து அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, சகானா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சகானா உயிரிழந்தார்.

நோயாளிகளுக்கு அறுவைச்சிகிச்சையின்போது செலுத்தும் மயக்க ஊசியைப் போட்டுக்கொண்டு சகானா தன்னை மாய்த்துக்கொண்டது சடலக்கூராய்வில் தெரியவந்தது. தகவல் அறிந்ததும் மருத்துவக்கல்லூரிக்கு விரைந்த காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர்.

சகானா தங்கியிருந்த அறையிலிருந்து கடிதம் ஒன்றைக் கண்டெடுத்தனர். அந்த கடிதத்தில், 'இந்த உலகத்தில் அன்பிற்கு எந்த மரியாதையும் கிடையாது. எனது அப்பா போய் விட்டார். திருமணத்திற்கு வரதட்சணை கொடுக்க கூடைகூடையாக பணம் கொடுக்க எனக்கு யாரும் இல்லை. எல்லோருக்கும் பணம் மட்டும்தான் வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையிலும் காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

தற்கொலை செய்துகொண்ட டாக்டர் சகானா, தன்னுடன் படித்த ருவைஸ் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். திருமணத்துக்கு அவரும் சம்மதிக்க இரு வீட்டாரும் கடந்த மாதம் சந்தித்துப் திருமணம் குறித்து பேசியுள்ளனர். மாப்பிள்ளைக்கு வரதட்சணையாக ரூ. 50 லட்சம் ரொக்கமும் 50 சவரன் நகையும் காரும் தருவதாக சகானா வீட்டார் தயாராக இருந்துள்ளனர். ஆனால், ருவைஸ் 150 பவுன் நகை, 15 ஏக்கர் நிலம், பி.எம்.டபிள்யூ. கார் ஆகியவை வேண்டும் என கேட்டு கட்டாயப்படுத்தியுள்ளார். அதற்கு சஹ்னாவின் வீட்டினரோ, 'அவ்வளவு நகை, பணம் எங்களால் கொடுக்க முடியாது' என்று தெரிவித்துள்ளனர். ஆனால் ருவைஸோ ’கேட்ட வரதட்சணையைக் கொடுக்காவிட்டால் திருமணம் நடக்காது' என்று கூறியுள்ளார்.

காதலன் ருவைஸின் இந்தப் பேச்சால் சகானா கடும் அதிர்ச்சி அடைந்தார். ஒரு கட்டத்தில் தானே உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவை அவர் எடுத்தார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தவே, மகளிர் - குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநரிடம் சுகாதாரத் துறை அமைச்சர் அறிக்கை கேட்டுள்ளார்.

மாநில மகளிர் ஆணையத் தலைவர் சதிதேவி, சகானாவின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com