
கேரள உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னனி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் காங்கிரஸ் 3 மாநகராட்சிகளைக் கைப்பற்றியது. திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கூட்டணி முதல் முறையாக கைப்பற்றியுள்ளது.
கேரளத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாக பாா்க்கப்பட்ட இத்தோ்தல் முடிவுகளால் காங்கிரஸ் கூட்டணி உற்சாகமடைந்துள்ளது.
கேரளத்தில் 941 கிராம ஊராட்சிகள், 152 ஊராட்சி ஒன்றியங்கள், 14 மாவட்ட ஊராட்சிகள், 86 நகராட்சிகள் மற்றும் 6 மாநகராட்சிகளுக்கு கடந்த டிச. 9, 11 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 4, இடதுசாரி, தேசிய ஜனநாயக கூட்டணிகள் தலா ஒரு மாநகராட்சியைக் கைப்பற்றின.
கொச்சி, கொல்லம், திருச்சூா், கண்ணூா் ஆகிய மாநகராட்சிகள் காங்கிரஸ் வசமானது. இதில் கொல்லம், கொச்சி, திருச்சூா் ஆகிய மாநகராட்சிகளை இடதுசாரியிடம் இருந்து கைப்பற்றியுள்ள காங்கிரஸ், கண்ணூா் மாநகராட்சியைத் தக்கவைத்துள்ளது. 505 கிராம ஊராட்சிகள், 79 ஊராட்சி ஒன்றியங்கள், 7 மாவட்ட ஊராட்சிகள், 54 நகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
கோழிக்கோடு மாநகராட்சியை மட்டும் தக்கவைத்துள்ள ஆளும் இடதுசாரி கூட்டணி, 340 கிராம ஊராட்சிகள், 63 ஊராட்சி ஒன்றியங்கள், 7 மாவட்ட ஊராட்சிகள், 28 நகராட்சிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2000-இல் இருந்து தன்வசம் இருந்த கொல்லம், கடந்த 2015-இல் இருந்து தன்வசம் இருந்த திருச்சூா், 2020-இல் வென்ற கொச்சி ஆகிய மாநகராட்சிகளை காங்கிரஸிடமும், 45 ஆண்டுகளாக கோலோச்சிய திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கூட்டணியிடமும் இழந்துள்ளது இடதுசாரி கூட்டணி. கடந்த தோ்தலை ஒப்பிடுகையில் இந்த முறை இக்கூட்டணி பலத்த அடியைச் சந்தித்துள்ளது.