கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன் இன்று காலமானார். அவருக்கு வயது 101.
சில ஆண்டுகளாகவே முதுமை காரணமாக உடல் நலிவுற்றிருந்த அவர், கடந்த மாதம் 23ஆம் தேதியன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர் சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று பிற்பகல் அவர் காலமானார்.
கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011வரை அவர் கேரளத்தின் முதலமைச்சராக இருந்தார். அதற்கு முன்னரும் பின்னரும் 15 ஆண்டுகள் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றினார்.
1923இல் பிறந்த அச்சுதானந்தன், சுதந்திரப் போராட்ட காலத்துப் போராட்ட எழுச்சி மண்ணான புன்னபுரா(- வயலாறு}வில் பிறந்தார். சிறு வயதிலேயே கடின வாழ்க்கைக்குத் தள்ளப்பட்ட அவர், இயல்பாகத் தொழிற்சங்கத்தை நோக்கிச் சென்றார்.
1940-களில் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளில் பங்குகொண்டார். 1964ஆம் ஆண்டில் சிபிஐ கட்சியிலிருந்து சிபிஐஎம் கட்சி உருவானபோது அதன் தொடக்கத் தலைவர்களில் ஒருவராக இருந்தார்.
அக்கட்சியின் கேரள மாநிலச் செயலாளராகவும் அகில இந்திய அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகவும் பணியாற்றிய அச்சுதானந்தன், தன் ஆட்சிக் காலத்தில் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.