நாகிலேரியா ஃபோலேரி- மூளைக் கொல்லி அமீபா
நாகிலேரியா ஃபோலேரி- மூளைக் கொல்லி அமீபா

எச்சரிக்கை… மூளையைக் கொல்லும் அமீபா!

மூளையை உண்ணும் ஒருவகை அமீபா மூலம் கேரளாவில் 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த சிறுமியின் உடலில் ‘மூளையை உண்ணும் அமீபா’ எனப்படும் 'நாகிலேரியா ஃபோலேரி’ (Naegleria fowleri) அமீபா இருந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அசுத்தமான நீரில் காணப்படும் இந்த வகை அமீபா, ஒட்டுண்ணி வகையைச் சாராதது. இவை மூக்கு வழியாக உடலுக்குள் நுழைந்து, மூளையை அடைந்து மூளைத்திசுக்களை அழித்துவிடுகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் முண்ணியூர் பகுதியில் வசித்துவந்த சிறுமி ஒருவர் கடந்த 1ஆம் தேதி வீட்டின் அருகிலிருந்த குளத்தில் குளித்துள்ளார். அவருடன் நான்கு சிறுவர்கள் குளித்துள்ளனர். அதில் இந்தச் சிறுமிக்கு மட்டும் காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்ற பிரச்னைகள் தொடர்ந்து ஏற்பட்டுள்ளன.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சையளிக்கப்படவேண்டிய நிலை வந்தது. ஆனாலும் அவருக்கு அளிக்கப்பட்ட எந்த மருந்தும் பலனளிக்கவில்லை.

கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு வாரத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த சிறுமி, கடந்த 20 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதையடுத்து, இந்த நோயின் பாதிப்பு குறித்து அம்மாநில அரசு எச்சரிக்கை அறிவிப்புகளைக் கூடுதலாக்கியுள்ளது.

மூளையை உண்ணும் இந்த அமீபா பாதித்தவர்களுக்கு நோய் அறிகுறிகள் தென்படத் தொடங்கிய முதல் நாளிலிருந்து அடுத்த பதினெட்டு நாள்களில் இறந்துபோக நேரும் என்றும், நினைவிழப்பு போன்ற நிலை ஏற்படலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த பாதிப்புக்கு இதுவரை சரியான சிகிச்சை முறை கண்டறியப்படவில்லை.

மேலும், இந்த அமீபாவால் இந்தியாவில் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மட்டும் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கேரளாவில் இந்தத் தொற்று அதிகம் ஏற்படுவதற்கு அங்குள்ள அதிகப்படியான நீர்நிலைகளே காரணம் என்கின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com