மேற்கு வங்க மருத்துவர் கொடூரக் கொலை- சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம்!
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலின வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி இரண்டு நாட்களாக தில்லி எய்ம்ஸ் உட்பட நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பலரும் வழக்கு தொடுத்தனர். நீதி விசாரணை நடத்தவேண்டும், சிபிஐ விசாரிக்க வேண்டும், ஆணையம் அமைக்கவேண்டும் என பல கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.
வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி சிவஞானம் தலைமையிலான அமர்வு, வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது.
முன்னதாக, இப்படி வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டால் அதற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவிக்காது என்று முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறியிருந்தார்.
நீதிமன்ற உத்தரவுப்படி, நாளை காலை 10 மணிக்குள் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைத்தாக வேண்டும்.