கும்பமேளா தொடங்கியது; லட்சக்கணக்கில் பக்தர்கள் நீராடல்! வரலாறும் புராணமும்

kumbh mela
கும்பமேளா
Published on

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடக்கும் பூரணகும்பமேளா இன்று (13-01-2025)  பௌஷ் பௌர்ணமியை ஒட்டி தொடங்குகிறது. அங்குள்ள பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, புராண நதியான சரஸ்வதி ஆகியவை சந்திக்கும் திரிவேணி சங்கமத்தில் இன்று தொடங்கி  பிப்ரவரி 26 ஆம் தேதி முடிவடைகிறது. 45 கோடி பக்தர்கள்  இந்நாட்களில் இங்கு முழுக்குப் போட வருவார்கள் என்று உபி மாநில அரசு எதிர்பார்த்து ஏற்பாடுகள் செய்துள்ளது. இதில் கலந்துகொள்ள 15 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலகிலேயே அதிகமான அளவில் பக்தர்கள் கூடும் விழாவாக இந்த மகா கும்பமேளா கருதப்படுகிறது.

Kumbh mela at prayagraj
பிரயாக்ரஜில் கும்பமேளா

கும்பமேளாவின் புராணக் கதை

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அமுதக் கலசத்துடன் தன்வந்திரி தோன்றினார். அசுரர்களுக்கு அமுதம் கிடைக்கக் கூடாது என்பதற்காக இந்திரனின் மகன் ஜெயந்தன் இந்த அமுதக் கலசத்தைத் தூக்கிக் கொண்டு ஓடினான். சூரியன், சனி, பிரகஸ்பதி(வியாழன்), சந்திரன் ஆகியோரும் அவனுடன் ஓடினர்.

அமுதக் கலசத்துடன் ஓடியபோது நான்கு இடங்களில் அமுதம் சிந்தியது. ஹரித்துவார்,  பிரயாக் ராஜ், உஜ்ஜயினி, நாசிக் ஆகிய நான்கு இடங்கள் அவை.  இந்த நான்கு நகரங்களில் கும்பமேளா கொண்டாடப்படுகிறது. 12 நாட்கள் ஜெயந்தன் ஓடியதாகவும், தேவர்களுக்கு ஒரு நாள் என்பது மனிதர்களுக்கு ஒரு ஆண்டு. எனவேதான் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியன் சனி, குரு, சந்திரன் ஆகிய கிரகங்களின் இருப்பை வைத்து இந்த கும்ப மேளா தினங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் கும்பமேளா பூரண கும்பம் என்று ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது அர்த்த கும்ப மேளா என்றும் கொண்டாடப்படுகிறது.

ஹரித்துவார் கங்கைக் கரையிலும் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்திலும், உஜ்ஜயினி  ஷிப்ரா நதிக்கரையிலும் நாசிக் கோதாவரி நதிக்கரையிலும் அமைந்துள்ளன. கும்பமேளா தினங்களில் இந்த நதிகளில் நீராடுவது பாவங்களைப் போக்கும் என்று புண்ணியம் சேர்க்கும் எனவும் இந்து மத நம்பிக்கைகள் கூறுகின்றன.

இச்சமயத்தில் இந்துமத சாதுக்களும் துறவிகளும் கூடுவர். அவர்களை நாடுமுழுக்க இருந்து வரும் சாமானிய பக்தர்கள் சந்திக்கும் வாய்ப்பு உண்டு.

இந்த நடப்பு கும்பமேளாவை ஒட்டிய வானியல் அமைப்புகள் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைபவையாக இருப்பதால் இது மேலும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

Naga baba at Kumbhmela
கும்பமேளாவில் நாகா சாதுக்கள்

யுவான் சுவாங்கும் சங்கரரும்

ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த யுவான் சுவாங், பிரயாகையில் நடந்த மாபெரும் மக்கள் பெருந்திரள் கூடுகை பற்றிக் குறிப்பிடுகிறார். அதில் ஹர்ஷர் தன் சொத்துக்களை எல்லாம் தானம் செய்ததைப் பற்றி எழுதுகிறார். ஆனால் அந்த நிகழ்ச்சிதான் கும்பமேளா என்று தெளிவாக இல்லை. பிறகு எட்டாம் நூற்றாண்டில் சங்கரர்தான் இந்த நான் கும்பமேளாக்களையும் வரையறுத்து, இந்து மத சாதுக்களும் பக்தர்களும் சங்கமிக்கும் இடமாக மாற்றிக் கொடுத்தார் என்ற கருத்தும் உள்ளது.  அப்படி இல்லை இது புராணகாலத்தில் இருந்து நடந்துவரும் நிகழ்வு என்போரும் உள்ளனர்.  ரிக்வேத சுலோகங்களில் கும்பமேளாவில் பங்கேற்பதின் நன்மைகள் கூறப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

லட்சக்கணக்கானோர் இந்தியாவின் மூலை முடுக்கில் இருந்தெல்லாம் பல நூற்றாண்டுகளாக கும்பமேளாவுக்காக இந்த நதிக்கரை நோக்கிப் பாதயாத்திரை மேற்கொண்டுவருவர். ஆன்மிக கலாச்சார ரீதியில் மிக முக்கியமான நிகழ்வாக நடந்துவரும் இந்த கும்பமேளாவுக்கு ஏற்பாடுகளை உபி அரசு விமர்சையாக செய்துள்ளது. இதன்  மூலம் 2 லட்சம் கோடி அது வருவாயாக ஈட்டும் எனக் கருதப்படுகிறது.’

இந்நிகழ்வுக்காக 7000 கோடி ஒதுக்கப்பட்டு, ஏழு அடுக்கு பாதுகாப்பு மேற்கொள்ளப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com