மக்களவையின் முதல் கூட்டத் தொடா் இன்று தொடங்கவுள்ள நிலையில், இடைக்கால மக்களவத் துணைத் தலைவர் பொறுப்பை இந்தியா கூட்டணி புறக்கணித்துள்ளது.
மக்களவை இடைக்கால தலைவராக ஒடிசா மாநிலம், கட்டக்கிலிருந்து தொடர்ந்து 7 ஆவது முறையாக தேர்வான பர்த்ரு ஹரி மகதாப் அண்மையில் நியமிக்கபட்டார்.
அதேநேரம், மக்களவைத் இடைக்கால தலைவர் பதவிக்கு கேரளத்தைச் சேர்ந்த 8 முறை காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷை நியமிக்காமல் புறக்கணித்துவிட்டதாக, மத்திய அரசை காங்கிரஸ் விமர்சித்தது. கொடிக்குன்னில் சுரேஷ் தலித் என்ப தால், அவர் புறக்கணிக்கப்பட்டதாக அக்கட்சி குற்றம்சாட்டியது. ஆனால், காங்கிரஸின் குற்றச்சாட்டை நிராகரித்த நாடாளு மன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, 'கொடிக்குன்னில் சுரேஷ் 8 முறை எம்.பி. என்றபோதிலும், அவர் தொடர்ந்து மக்களவைக்கு தேர்வாகவில்லை. ஆனால், பர்த்ருஹரி மகதாப் தொடர்ந்து 7 முறை மக்களவைக்கு தேர்வானவர்' என்றார்.
இந்த விவகாரத்தை காங்கிரஸ் அரசியலாக்குவதாகவும் அமைச்சர் கூறினார். எனினும், மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, இடைக்காலத் தலைவருக்கு உதவும் குழுவில் இடம்பெறப் போவதில்லை என்று எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்த சர்ச்சைக்கு மத்தியில், 18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கவிருக்கிறது.
இடைக்கால துணைத் தலைவர் பொறுப்பு:
இடைக்கால மக்களவைத் தலைவருக்கு உதவுவதற்காக குடியரசுத் தலைவரால் தலைவர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொடிகுன்னில் சுரேஷ் (காங்கிரஸ்), டி.ஆர்.பாலு (தி.மு.க.), ராதா மோகன் சிங் (பா.ஜ.க.), பக்கன் சிங் குலாஸ்தே (பா.ஜனதா), சதீப் பந்தோப்பாத்யாய் (திரிணாமுல் காங்கிரஸ்) ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மக்களவைத் தலைவர் யார்?
புதிய மக்களவைத் தலைவராக தேர்வாகப் போவது யார் என்ற கேள்வியும் நீடித்து வருகிறது.
பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இருகட்சிகளுமே மக்களவைத் தலைவர் பதவியை எதிர்பார்ப்பதாக கூறப்படும் நிலையில், அப்பதவியை பாஜக விட்டுக் கொடுக்காது என்று சொல்லப்படுகிறது.
கடந்த இரு தேர்தல்களைப் போல் இல்லாமல், மக்களவையில் எதிர்க்கட்சிகளின் பலம் இம்முறை கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே, எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி தரப்பில் வேட்பாளர் களமிறக்கப்படலாம் என ஊகங்கள் வெளியாகி வருகின்றன.