மோடியின் அதிரடி... சமையல் எரிவாயு விலை ரூ.200 குறைப்பு!

மோடியின் அதிரடி... சமையல் எரிவாயு விலை ரூ.200 குறைப்பு!

பத்தாண்டுகளாக அதிகரித்துக்கொண்டே வந்த சமையல் எரிவாயுவின் விலை முதல் முறையாக 200 ரூபாய் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

கொரோனோவுக்கு முன்னரும் பின்னரும் சர்வதேச சந்தையில் பெட்ரோலிய விலை சரிபாதிக்கும் கீழே குறைந்தது. ஆனாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற பெட்ரோலியப் பொருட்களின் விலை சொல்லும்படியாகக் குறைக்கப்படவில்லை.

இந்த நிலையில், நேற்று கூடிய மத்திய அமைச்சரவை நாடு முழுவதும் வீட்டுப் பயன்பாட்டு சமையல் எரிவாவு விலையில் 200 ரூபாய் குறைக்க முடிவுசெய்தது.

அமைச்சரவையின் பேச்சாளரான மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் நேற்று ஊடகங்களுக்கு இதைத் தெரிவித்தார்.

ஓணம், ரக்சா பந்தன் கொண்டாட்டத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் பெண்களுக்கு அளித்துள்ள பரிசு என்றும் அவர் இதை வருணித்தார்.

சென்னையில் தற்போது வீட்டு பயன்பாட்டு சமையல் விரிவாயுவின் விலை 1,118.5 ரூபாயாக உள்ளது. விலைக்குறைப்பால் இனி 918.5 ரூபாய்க்கு எரிவாயு விற்பனை செய்யப்படும். புதுதில்லியில் 1,103 ரூபாயாக இருக்கும் எரிவாயுவின் விலை ரூ.903 ஆகக் குறையும்.

ஏழை மகளிருக்கான உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எரிவாயுவுக்கு ஏற்கெனவே வழங்கப்படும் 200 ரூபாய் மானியத்துடன், இந்த விலைக்குறைப்பும் சேரும் என்றும் அமைச்சர் அனுராக் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com