மோடி சொல்லும் 7.8% வளர்ச்சி- மல்லிக்கார்ஜூன் கார்கேவின் 3 கருத்துகள்!

Mallikarjun Kharge
மல்லிகார்ஜூன கார்கே
Published on

நாட்டு மக்களின் கடின உழைப்பால் இந்தியா 7.8% வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளதாக பிரதமர் மோடி கூறியதை தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிக்கார்ஜூன் கார்கே விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு:

"நம் நாடு வளர்ச்சியடைந்துள்ளதாக நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், அந்த வளர்ச்சி உங்களுக்கு மட்டும்தான் பயனளிக்கிறது; சாதாரண மக்களுக்கு இல்லை. அவர்கள் பல்வேறு சுமைகளைச் சுமந்து வருகிறார்கள்.

நாட்டு மக்கள் எதிர்பார்க்காத அளவில் வேலையின்மை, தாங்கிக்கொள்ளமுடியாத விலை உயர்வு, கட்டுங்கடங்காத சமத்துவமின்மை ஆகியவற்றை எதிர்கொண்டு வருகிறார்கள்.

1) கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை தற்போது உள்ளது. 15 முதல் 29 வயதுடையவர்களில் ஆறில் ஒன்று என்கிற அளவில் இளைஞர்கள் நடப்பு ஆண்டில் வேலையில்லாமல் இருக்கின்றனர். வருடத்திற்கு இரண்டு கோடி வேலை என்னும் உங்களின் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகிவிட்டன.

2) கடந்த 19 மாதங்களாக பணவீக்கம் அதிகரித்து வருகிறது. சர்க்கரை, வெங்காயம், தக்காளி, பருப்பு, சமையல் எண்ணெய், அரிசி, சர்க்கரை, பால், இதர சமையல் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி.,சி.என்.ஜி. ஆகியவற்றின் விலை வாங்கமுடியாத அளவிற்கு உயர்ந்துள்ளன. நடுத்தர மக்கள் போராடி வாழ்க்கையை நடத்திவருகிறார்கள். ஏழை மக்கள் நம்பிக்கையை இழந்து தவிக்கிறார்கள்.

3) ஆங்கிலேய ஆட்சியைவிட தற்போது சமத்துவமின்மை மோசமாக உள்ளது. மேம்பட்ட 1% மக்கள் மட்டுமே இந்தியாவின் மொத்த செல்வத்தில் 40% வைத்திருக்கின்றனர்.

மக்களிடம் பொய் சொல்லும் உங்கள் திறமையை விட வேறு எதுவும் மாற்றம் பெறவில்லை." என்று மல்லிக்கார்ஜூன் கார்கே கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com