மகுவா மொய்த்ரா
மகுவா மொய்த்ரா

பதவிநீக்கப்பட்ட மகுவா மொய்த்ராவுக்கு மீண்டும் அதே தொகுதி - மமதா உறுதி, கண்டனம்!

மகுவா மொய்த்ராவுக்கு திருணாமூல் காங்கிரஸ் கட்சி துணையாக இருக்கும் என்றும் அதே தொகுதியில் அவர மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெறுவார் என்றும் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்குவங்க மாநிலம் கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் மகுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக பல பிரச்னைகளிலும் தீவிரமாக கருத்துகளை எடுத்துவைத்தபடி இருந்தார். குறிப்பாக, அதானி குழுமத்துக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு என்பது பற்றி அவர் கடுமையாகப் பேசினார்.

இந்த நிலையில், திடீரென மகுவா மீது கேள்வி கேட்டதற்காக பணத்தைப் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டது. அவர் மீது மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த நவம்பரில் நடத்தப்பட்ட விசாரணையில் ஆளும் கட்சி தரப்பு தன்னிடம் அத்துமீறியதாக மகுவா எதிர்ப்புத் தெரிவித்தார். அதன்பிறகு அவர் குற்றவாளி என்று முடிவுசெய்யப்பட்டு, நெறிமுறைக் குழுத் தலைவர் பா.ஜ.க. எம்.பி. வினோத்குமார் சோன்கர் மக்களவையில் நேற்று அறிக்கை அளித்தார்.

அதன்படி, அமைச்சர் பிரகலாத் ஜோசி மகுவாவை நீக்கும் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அப்போது பேசமுற்பட்ட மகுவாவுக்கு அவைத்தலைவர் ஓம்பிர்லா அனுமதி மறுத்தார். பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மகுவாவின் பதவிநீக்கத்தை மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா அறிவித்தார்.

இதுகுறித்து மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மமதா பானர்ஜி, வன்மையாகக் கண்டனம் தெரிவித்தார். இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் என்றும் மகுவா அதே தொகுதியில் போட்டியிட்டு மக்கள் ஆதரவுடன் மீண்டும் வெற்றிபெறுவார் என்றும் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com