சத்தீஸ்கர் மாநிலத்தில் நடப்பு கல்வியாண்டு முதலே இந்தியில் மருத்துவப் படிப்பு கற்பிக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் விஷ்ணுதேவ் சாய் தெரிவித்துள்ளார்.
ராய்ப்பூரில் உள்ள அவரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நேற்று இந்தி நிவாஸ் நாள் விழாவில் கலந்துகொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதைத் தெரிவித்தார்.
இந்தி நிவாஸ் நாளில் இந்த அரசாங்கம் எடுத்திருக்கும் முக்கிய முடிவு இது என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போது ஆங்கிலவழியில் மட்டும் கற்பிக்கப்படும் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பு இனி இந்திவழியிலும் கற்பிக்கப்படும் என்றும் இந்தக் கல்வியாண்டு முதலே இந்திப் புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் இந்திப் புத்தகங்கள், பாடக்குறிப்புகளை உருவாக்கித் தருமாறு சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் விஷ்ணுதேவ் சாய் கூறினார்.
இந்த நடவடிக்கையானது குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்; பெரும்பாலும் இந்திவழியில் படித்து வரும் அவர்கள் திறன்களோடு இருந்தாலும் ஆங்கிலத்தில் உள்ள மருத்துவப் படிப்பைப் புரிந்துகொள்வதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்; இந்தியிலேயே படிப்பதன் மூலம் அவர்கள் மருத்துவக் கல்வியின் அடிப்படையை நன்கு புரிந்துகொண்டு சிறந்த மருத்துவர்களாக உருவாகமுடியும் என்றும் சத்தீஸ்கர் முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.