விமான உணவுடன் கலந்திருந்த பிளேடு
விமான உணவுடன் கலந்திருந்த பிளேடு

என்னாது... விமான உணவில் பிளேடா!?

கீழே இருந்து மட்டுமே பார்ப்பவர்களுக்கு விமானப் பயணம் என்றால் இருக்கும் கற்பனைச் சித்திரங்கள், அதில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு இருக்காது என்பது மட்டும் நிச்சயம்!

அண்மையில் பெங்களூருவிலிருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவுக்குச் சென்ற ஒரு பயணிக்கு அதிர்ச்சி... மதுரேஸ் பால் என்ற அந்தப் பயணி சென்றது, ஏர் இந்தியாவின் ஏஐ 175 விமானத்தில்!

விமானத்தில் அவருக்கு உருளைக்கிழங்கு வறுவலும் அத்திப்பழ சாலட்டும் உணவாகத் தந்திருக்கிறார்கள். அதில் அவருக்கு எந்தக் குறையும் இல்லை.

ஆசையாக உணவை வாயில் போட்டு மெல்லத் தொடங்கியவருக்கு, ஏதோ ஒன்று பலமாக இடறவே, அப்படியே மென்ற உணவைத் தட்டிலேயே துப்பிவிட்டார். பார்த்தால், அந்தத் தட்டில் வறுவலோடு சிறு பிளேடு ஒன்றும் இருந்தது!

உணவில் எப்படி பிளேடு வரமுடியும்...

அந்த அதிர்ச்சியிலிருந்து மதுரேசால் அவ்வளவு சீக்கிரமாக விடுபட முடியவில்லை.

தொழில்நுட்ப எழுத்தாளரான அவர், நடந்த சம்பவம் குறித்து கடந்த 16ஆம் தேதி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் எழுதியுள்ளார்.

”...... இரண்டுமூன்று வினாடிகள் உணவைச் சவைத்தபோதே அது ஏதோ ஒன்று எக்குத்தப்பாக இருக்கிறதே என மனதில் பட்டது. மென்ற உணவை உடனே துப்பிவிட்டேன்; சில நொடிகளில் என்னவென்றும் தெரிந்துவிட்டது. உடனடியாக அங்கு வந்த பணிப்பெண்கள் சரியாக மூன்று நொடிகளில் நின்று, மன்னிப்பு கேட்டுவிட்டு நகர்ந்துவிட்டார்கள். பதிலுக்கு இன்னொரு கிண்ணத்தில் சுண்டலைக் கொண்டுவந்து தந்தார்கள். முதலில், விமானத்தில் பிளேடு இருப்பது எவ்வளவு ஆபத்து! இரண்டாவதாக, ஒருவேளை அது என் தொண்டையைக் கிழித்திருக்கக்கூடும். மூன்றாவது, ஒரு வேளை ஏதோ குழந்தை இதைச் சாப்பிட்டிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்..?” என படிக்கும்போதே நம்மையும் பயம்கொள்ள வைக்கிறது.

பிரச்னை குறித்து விமான நிறுவனத்திடம் புகார்செய்தாக வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். சில நாள்களுக்குப் பிறகு ஏர் இந்தியா விமான நிறுவனத்திடமிருந்து பாலுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். “அடுத்த ஆண்டுக்குள் பிசினஸ் பயணமாக எந்த ஊருக்கு வேண்டுமானாலும் நீங்கள் போகலாம்; வாய்ப்பு தருகிறோம் என்று சொன்னார்கள். அது அப்பட்டமான ஊழல்தனம் என்பதால் நான் மறுத்துவிட்டேன்.” என்றும் எக்ஸ் பக்கப் பதிவில் மதுரேஸ் பால் விவரித்துள்ளார்.

அவருடைய இந்த அனுபவப் பதிவையொட்டி பலரும் தங்களுடைய சொந்த அனுபவங்களை பதில் பகுதியில் எழுதிவருகின்றனர்.

குறிப்பாக, அரசாங்க நிறுவனமாக இருந்தபோதும் தனியார் டாட்டா வசம் வந்தபிறகும் ஏர் இந்தியாவின் சேவை இப்படித்தான் பலவகைகளில் அரைகுறையாக இருக்கிறது எனப் பலரும் மனக்குறைகளைக் கொட்டித் தீர்த்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் இந்த சம்பவம் பெரிய அளவுக்கு விவாதத்துக்கு உள்ளானதைத் தொடர்ந்து, விமான நிறுவனத் தரப்பில் ”ஆமாமா அப்படி சம்பவம் ஒண்ணு நடந்தது உண்மைதான்” என்பதாக விளக்கம் ஒன்றை வெளியிட்டார்கள்.

”எங்களுடைய விசாரணையில், அந்த பிளேடு வாடிக்கையாக சமையல்செய்து தரும் நிறுவனத்தின் காய்கறி நறுக்கும் எந்திரத்திலிருந்து கழன்று விழுந்துவிட்டிருக்கிறது. பிரச்னை குறித்து அவர்களிடம் பேசியிருக்கிறோம். மேற்கொண்டு இதைப் போல அசம்பாவிதம் நிகழாதபடி உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறோம்.” என்று ஏர் இந்தியாவின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவு தலைமை அதிகாரி ராஜேஷ் டோக்ரா ஊடகங்களிடம் தெரிவித்தார்.

பொதுவாக, கூர்மையான கத்தி, கத்திரிக்கோல், சுவிஸ் இராணுவக் கத்திகள் போன்றவை, பாதுகாப்புக் காரணங்களுக்காக விமானத்தில் தடைசெய்யப்பட்டவை. ஆனாலும் இந்த பிளேடு எப்படி வந்தது என்பது பற்றி வான் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான டிஜிசிஏ இதுவரை வாய்திறக்கவில்லை.

இந்த நிலையில், இதைப் போலவே ஒரு சம்பவம், கடந்த 15ஆம் தேதியும் ஏர் இந்தியாவில் மீண்டும் நிகழ்ந்திருக்கிறது. கடந்த 15ஆம் தேதியன்று தில்லியிருந்து நேவார்க் செல்லும் ஏஐ 105 விமானத்தில் ஒரு ’பயங்கர’ அனுபவம் ஏற்பட்டதாகக் குறிப்பிடுகிறார், வினீத் கே என்பவர்.

“நேரடி விமானம் என்பதால் ஏர் இந்தியா சேவையைத் தேர்வுசெய்தேன். பிசினஸ் வகுப்பு பயணச்சீட்டை முன்பதிவு செய்தேன். இருக்கைகள் அசுத்தமாக இருந்ததுடன், அழுக்காகவும் இருந்தன. 35 இருக்கைகளில் குறைந்தது ஐந்து இருக்கைகளாவது மோசமாகத்தான் இருந்தது. தரப்பட்ட உணவும் பழையதாகவும் சரியாக சமைக்கப்படாமலும் இருந்தது. என்னுடைய லக்கேஜும் சேதமாகிவிட்டது.”என்கிறது வினீத்தின் முறைப்பாடுகள் பட்டியல்.

இதற்கெல்லாம் விசாரணை ஆணையம் அமைத்தா நடவடிக்கை எடுப்பார்கள்?

logo
Andhimazhai
www.andhimazhai.com