3 வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை: விவசாயிகள் போராட்டம் நிறுத்தம்!

3 வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை: விவசாயிகள் போராட்டம் நிறுத்தம்!

பருப்பு வகைகள், சோளம், பருத்தி ஆகிய 3 வேளாண் விளைபொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளதால், டெல்லிக்குள் நுழையும் போராட்டத்தை இரண்டு நாள்களுக்கு நிறுத்தி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லி எல்லையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நேற்று 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. சண்டிகாரில் நடந்த பேச்சுவார்த்தையில் மத்திய அரசு சார்பில் மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், அர்ஜுன் முண்டா, நித்யானந்த் ராய் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அரசுக்கும் விவசாய சங்கங்களுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன்படி, விவசாயிகளிடமிருந்து பருத்தி, பருப்பு வகைகள், சோளம் ஆகிய 3 விளைபொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்படும் என மத்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த 3 விளைபொருட்களையும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வோம் என மத்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

மத்திய அரசின் உத்தரவாதம் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக டெல்லியை முற்றுகையிடும் விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட மேலும் சில கோரிக்கைகளை அடுத்த 2 நாட்களுக்குள் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் இல்லையேல் நாளை மறுதினம் 11 மணியளவில் மீண்டும் டெல்லியை நோக்கி பேரணி செல்வோம் என விவசாய சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com