பைக்கில் பட்டாசு வைத்து வெடித்து சாகசம் செய்த இளைஞர் பிடிபட்ட நிலையில், அரியானாவில் ஓடும் காரின் மேலே பட்டாசு வைத்து வெடித்து இளைஞர்கள் சிலர் அட்டூழியம் செய்துள்ளனர்.
அரியானாவை உள்ளடக்கிய புதுடெல்லி தேசிய தலைநகரப் பகுதி வட்டாரத்தில் பட்டாசுகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள போதும், குருகிராமில் ஓடும் காரின் மீது பட்டாசுகளை வைத்து வெடித்து ஒரு கும்பல் அட்டூழியம் செய்துள்ளது.
ஆறு பேர் செல்லக்கூடிய ஒரு காரின் மேல்பகுதியில் முன்பக்கமாக இரண்டு பெட்டிகளில் பட்டாசுத் தொகுப்புகள் வைக்கப்பட்டு, அவற்றைத் தீவைத்து வெடித்துக்கொண்டே ஒரு கும்பல் அதிவேகமாகச் செல்வதும் அதைத் தொடர்ந்தும் அருகிலும் மற்ற கார்களில் கும்பலாக மற்றவர்கள் வருவதும் குறிப்பாக பின்னால் வரும் காரில் காரின் கூரையைத் திறந்துவிட்டு இளைஞர் ஒருவர் கூச்சலிடுவதையும் பார்க்கவே திகிலூட்டுவதாக இருக்கிறது.
சமூக ஊடகங்களில் தீயாய்ப் பரவிவரும் இந்தக் காட்சியில், கார்களின் பதிவெண்கள் காட்டப்படவில்லை. ஆனாலும் இதுகுறித்து அரியானா காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தி முகமை ஒன்றுக்குப் பேசிய குருகிராம் காவல்துறை உதவி ஆணையர் வருண்குமார் தகியா, சமூக ஊடகங்கள் மூலம்தான் தங்களுக்கு இது தெரியவந்ததாகவும் வேறு சில தரப்புகளிடமிருந்து இப்படி சாலைகளில் அட்டகாசம் செய்பவர்களைப் பற்றிய தகவல் கிடைத்திருப்பதாகவும் கூறினார்.
காவல்துறையினரும் தகவல்களைத் திரட்டிக்கொண்டிருக்கின்றனர் என்றும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பல சம்பவங்களைப் பற்றி கூறப்படுகிறது; கண்காணிப்பு கேமரா போன்றவை மூலம் குறிப்பிட்ட பகுதியைப் பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறோம் என்றும் தகியா கூறினார்.