நீட் தேர்வு, மற்ற தேசிய நுழைவுத் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளைத் தவிர்க்கவும், தேர்வு முறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் ஓர் உயர்மட்டக் குழுவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்தை தொடர்ந்து, பல்வேறு அறிவிப்புகளை பிரதமர் மோடி அடுத்தடுத்து அறிவித்துவந்தார்.
போராட்டத்தின் விளைவாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்.
தேர்வு முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம், வினாத்தாள் கசிவைத் தடுக்க சிறப்பு மசோதா ஆகிய அறிவிப்புகளை வெளியிட்ட பிரதமர், தற்போது தேர்வு முறைகளைச் சீரமைக்க உயர்மட்டக் குழு ஒன்றை அறிவித்துள்ளார்.
தேர்வுகளில் ஏற்படும் வினாத்தாள் கசிவைத் தடுத்து, தேர்வு முறையை முற்றிலும் நவீனமயமாக்குதல் போன்ற சீரமைப்புகளை மேற்கொள்ள இன்போசிஸ் நிறுவனத்தின் இணை இயக்குநர் நந்தன் நிலகேணி தலைமையில் உயர்மட்டக் குழு அமையவுள்ளது.
ஆதார் கார்டு திட்டத்தின் முக்கிய வடிவமைப்பாளராக நந்தன் நிலகேணி இருந்துள்ளார். விளாத்தாள் தயாரிப்பு முதல் தேர்வு முடிவுகள் வெளியீடுவரை அனைத்துக் கட்டங்களிலும் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத் தீர்வுகளைப் பயன்படுத்துவதற்கான பரிந்துரைகளுடன் குழுவை அவர் வழிநடத்துவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்தக் குழுவில் விண்வெளித் துறையின் முன்னாள் செயலாளரும், இஸ்ரோவின் முன்னாள் தலைவருமான டாக்டர் எஸ். சோம்நாத், உளவுத்துறையில் இயக்குநராக பணியாற்றிய முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி தபன் குமார் தேகா, சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் வி.காமகோடி, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனிதா கர்வால், அம்ரித் லால் மீனா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.