பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்து-முஸ்லிம்: அடுத்தடுத்து அதிர்ச்சி தரும் பிரதமர் மோடியின் பிரச்சாரம்!

மக்களவைத் தேர்தலில் இரண்டாம் கட்டமாக வரும் 26ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி பல மாநிலங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இராஜஸ்தான் மாநிலத்தில் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார், பிரதமர் மோடி. நேற்றைக்கு முன்னாள் 21ஆம் தேதியன்று பன்ஸ்வாரா எனும் இடத்தில் பேசிய மோடி, நாட்டின் வளங்களை எல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம்களுக்குத் தாரைவார்த்துவிடுவதாகக் கூறியுள்ளது எனப் பேசினார். அதற்கு ஆதாரமாக முன்னாள் பிரதமர் மன்மோகனின் பேச்சையும் சுட்டிக்காட்டினார். ஆனால் அது உண்மை இல்லை என்பது தெரியவந்தது.

அதையடுத்து, நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் பேசிய மோடி, காங்கிரஸ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் ஏழை முஸ்லிம்களுக்கு எதுவுமே செய்யவில்லை; குறிப்பிட்ட முஸ்லிம்கள் மேம்பாடு அடைந்தபோதும் அடித்தட்டு முஸ்லிம்கள் இன்னும் கஷ்டப்படுகிறார்கள்; என்னுடைய தலைமையிலான ஆட்சி வந்தபிறகு முஸ்லிம் பெண்கள் முத்தலாக்கால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்; சவுதி இளவரசரிடம் பேசி அதிகமான ஹஜ் பயணத்துக்கு அனுமதி பெற்றிருக்கிறோம் என முஸ்லிம்கள் மீது நேசமாகப் பேசினார்.

மீண்டும் இன்று இராஜஸ்தானில் மோடி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். ஞாயிறன்று பேசியதைப் போலவே, இன்றும் அவர் பழைய விசயங்களையே குறிப்பிட்டார். ”ஞாயிறன்று நான் சில உண்மைகளை உங்கள் முன்னால் வைத்தேன். அதைக் கேட்டு இந்தியா கூட்டணி கடும் பீதியடைந்தது. உங்களின் சொத்துகளைப் பிடுங்கி வேறு நபர்களிடம் கொடுக்க காங்கிரஸ் முயல்கிறது. இதை அம்பலப்படுத்தினால் மோதியை அவதூறு பேசுகிறார்கள். நீங்கள் உருவாக்கிய கொள்கையைப் பேசினால் அதை எதிர்கொள்ளுங்கள். இதற்கு தயாரா என்பதைச் சொல்லுங்கள்.” என்று சவால் விடவும் செய்தார், மோடி.

பிரதமர் மோடியின் இந்தத் தொடர் பேச்சுகளுக்கு, காங்கிரஸ், இடதுசாரிகள், மற்ற பல கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com