ஒரு கிரைம் திரில்லர் கதையைப் போல நடந்தேறியிருக்கிறது, அந்தக் கொடூர சம்பவம். கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், 27 வயது பிரியாசேத் ’டிண்டர்’ டேட்டிங் ஆப் வழியாக துஷ்யந்த் ஷர்மாவுடன் நட்பாகப் பழக ஆரம்பித்துள்ளார். மூன்று மாதம் டிண்டர் சாட்டிங் மூலமாகவே பேசிக் கொண்டவர்கள், ஒரு நாள் நேரில் சந்திக்கலாம் என்று முடிவு செய்தனர். இருவரும் சந்தித்துக் கொள்வதற்கான இடத்தை பிரியாவே முடிவுசெய்தார்.
டிண்டர் காதலியை ஆசை ஆசையாகப் பார்க்கச் சென்ற துஷ்யந்துக்குக் காத்திருந்ததோ பெரும் அதிர்ச்சிதான்! பிரியாவும் அவரின் இரண்டு நண்பர்களும் சேர்ந்து துஷ்யந்தைப் பிடித்துவைத்துக்கொண்டு, பணயக் கைதியாக்கி அவரின் வீட்டாரிடம் பத்து லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். மகனின் உயிரை எப்படியாவது காப்பாற்ற நினைத்த துஷ்யந்தின் தந்தை மகனின் வங்கிக் கணக்கில் மூன்று லட்சம் ரூபாயைப் போட்டுள்ளார். உடனே அதிலிருந்து இருபது ஆயிரம் ரூபாயை எடுத்திருக்கிறார்கள், பிரியாவும் அவரின் கூட்டாளிகளும்.
ஆனாலும் துஷ்யந்தை வெளியே விட்டால் எப்படியும் தங்களின் இந்த மோசடிக் குற்றச் செயலைக் கண்டுபிடித்துவிடுவார்கள் என பிரியா கும்பலுக்கு அச்சம் குடிகொண்டது. விளைவு, துஷ்யந்தைத் துண்டுதுண்டாக வெட்டி சூட்கேஸில் போட்டு டெல்லி செல்லும் சாலையில் வீசிவிட்டுத் தப்பினர். அந்த உடல், 2018ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி ஜெய்ப்பூருக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது.
இந்தக் கொலை தொடர்பாக காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், கொலையாளிகள் பிரியா, திக்சாந்த் கம்ரா, லக்ஷ்யா வாலியா என்ற மூவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் துஷ்யந்தைப் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
பிரியாவிடம் பழக ஆரம்பித்தபோது, துஷ்யந்த், தான் பெரிய தொழில் அதிபர் என்றும் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் பொய் சொல்லி பழக ஆரம்பித்துள்ளார். அவரிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கத்தில்தான் பிரியாவும் பழகியுள்ளார். ஏனென்றால் பிரியாவுடன் சேர்ந்து சம்பவத்தில் ஈடுபட்ட திக்சாந்த் அவரின் காதலர்; அவருக்கு 21 லட்சம் ரூபாய் கடன் இருந்ததால் அதை அடைக்கவே துஷ்யந்திடம் பழகி பணம் பறிக்க திட்டமிட்டுதான் மாட்டிக்கொண்டார்கள்.
ஐந்து ஆண்டுகளாக ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் துஷ்யந்தின் கொலை வழக்கு நடைபெற்று வந்த நிலையில், பிரியா, திக்ஷாந்த் கம்ரா, லக்ஷ்யா வாலியா மூவரும் குற்றவாளிகள் என்பதை உறுதி செய்த ஜெய்ப்பூர் நீதிமன்றம், அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.