நீட் தேர்வில் முறைகேடு போல சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் சந்தேகமும் அதிர்ச்சியும் தெரிவித்துள்ளனர்.
நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்றது. 23.33 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது.
தேர்வு எழுதிய மாணவர்களில் 13,16,268 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 67 பேர் முதலிடம் பிடித்தனர். அவர்கள் அனைவரும் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதனால் கட் ஆஃப் மதிப்பெண் உயர்ந்திருப்பது மருத்துவ மாணவர் சேர்க்கையில் கடும் போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், நீட் தேர்வு குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
தேர்வில் முதலிடம் பிடித்த 67 மாணவர்களில் ஆறு பேர் அரியானாவில் உள்ள ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் என்றும்,
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த இராஜஸ்தானில் மட்டும் 11 பேர் முதலிடம் பெற்றுள்ளதாகவும்,
மேலும், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்த மாணவர்களும் 718, 719 மதிப்பெண்களை எடுத்துள்ளதாகவும் அதிருப்தியாளர்கள் தரப்பில் முன்வைக்கப்படுகிறது.
அதேபோல், நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதாகக் கூறும் தேசிய தேர்வுகள் முகமையின் விளக்கத்தை மாணவர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.
மேலும், ஒரே மையத்திலிருந்து 720-க்கு 720 மதிப்பெண்கள் பெறுவது நீட் தேர்வுத் தாள் கசிந்திருப்பதைக் காட்டுகிறது என்றும்,
கருணை மதிப்பெண் குளறுபடிகள் குறித்தும் தேசிய தேர்வு முகமை விரிவான ஆய்வு செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுத்துள்ளது.