ஆன்லைனில் நீட் நுழைவுத் தேர்வு? - விரைவில் அறிவிப்பு!
நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைனில் நடத்துவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வு, ஏராளமான முறைகேடு புகார்களில் சிக்கியது. வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியது, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட புகார்கள் எழுந்தன. இதனால் தேசிய தேர்வு முகமை கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்நிலையில் நீட் தேர்வை ஆன்லைனில் நடத்துவது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "நீட் தேர்வை நடத்தும் நிர்வாக அமைச்சகம், மத்திய சுகாதார அமைச்சகம் ஆகும். எனவே, நீட் தேர்வை வழக்கம்போல் காகிதம், பேனாவை பயன்படுத்தி நடத்தலாமா அல்லது ஆன்லைன் முறையில் நடத்தலாமா என்று மத்திய சுகாதார அமைச்சகத்துடன் மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது. இதுவரை 2 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. நீட் தேர்வுக்கு எது சிறந்த முறையாக இருக்குமோ, அதை பின்பற்ற தேசிய தேர்வு முகமை தயாராக உள்ளது. எந்த முறை என்று விரைவில் முடிவு செய்யப்படும். அந்த முறையில் அடுத்த ஆண்டில் இருந்து நீட் தேர்வு நடத்தப்படும்.
நீட் தேர்வு முறைகேடு பற்றி ஆராய அமைக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் தேர்வு சீர்திருத்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, அடுத்த ஆண்டில் இருந்து, உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வுகளில் மட்டுமே தேசிய தேர்வு முகமை கவனம் செலுத்தும். வேலைக்கான ஆள்தேர்வுகளை நடத்தாது.
அடுத்த ஆண்டு, தேசிய தேர்வு முகமை மாற்றி அமைக்கப்படும். தேர்வுகளில் தவறு நடக்காதவகையில், தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகளில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்படும்." என்றார்.