அமித் ஷா
அமித் ஷா

முற்றிலும் சுதேசிமயம் - அமித்ஷா சொன்னது என்ன?

நாடு விடுதலை அடைந்து 77 ஆண்டுகள் ஆகி இப்போதுதான் சட்டங்கள் அனைத்தும் சுதேசிமயம் ஆகியுள்ளது என மைய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதத்துடன் கூறினார்.

நாடு முழுவதும் மூன்று புதிய சட்டத் தொகுப்புகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இதையொட்டி தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய மாற்றத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது; இதை எப்போதோ செய்திருக்கவேண்டும் என்றார்.

தண்டனை அல்ல நியாயம், தாமதம் அல்ல விரைவான விசாரணை, விரைவான நீதிக்கு வழிசெய்யப்பட்டுள்ளது என்றும் முன்னர் காவல்துறையினரின் உரிமைகள் மட்டுமே பாதுகாக்கப்பட்டன; இனி பாதிக்கப்பட்டவர்கள், புகார்தாரர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்றும் அமித்ஷா கூறினார்.

இந்தியத் தண்டனைச் சட்டத்துக்குப் பதிலாக பாரதிய நியாய சன்கிதா-பிஎன்எஸ், குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்குப் பதிலாக பாரதிய நகரிக் சுரக்சா சன்கிதா-பிஎன்எஸ்எஸ், இந்திய சாட்சியச் சட்டத்துக்குப் பதிலாக பாரதிய சாக்சிய அதினியம்-பிஎஸ்ஏ என்றும் சட்டத்தொகுப்புகளின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன.

மாற்றப்பட்ட புதிய குற்றவியல் சட்டத்தின்படி, மத்தியப்பிரதேசம், குவாலியரில் முதல் வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும் அமித் ஷா தெரிவித்தார். ஒருவரின் பைக்கைத் திருடியது தொடர்பாக 12.10 மணிக்கு அந்த வழக்கு பதியப்பட்டது என்றும் அவர் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com