அமித்  ஷா, அரவிந்த் கெஜ்ரிவால்
அமித் ஷா, அரவிந்த் கெஜ்ரிவால்

அடுத்த பிரதமர் அமித் ஷா! -கெஜ்ரிவாலுக்கு வந்த உடனடி பதில்!

அமித் ஷாவை பிரதமராக்க பிரதமர் மோடி திட்டமிடுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்த நிலையில், “பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் நரேந்திர மோடியே பிரதமராக தொடருவார்” என்று அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

நேற்று காலை செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “மக்களவை தேர்தலுக்கு மத்தியில் நான் வெளியே வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், உங்கள் அனைவரின் வேண்டுதலாலும் கடவுளின் ஆசியாலும் நான் உங்கள் மத்தியில் இருக்கிறேன்.

ஆம் ஆத்மி போன்ற சிறிய கட்சியை ஒடுக்க பிரதமர் மோடி எந்தவொரு வாய்ப்பையும் விட்டுவைக்கவில்லை.

மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்று பெற்றால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், சிவசேனை (உத்தவ்) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் சிறையில் அடைப்பதே பிரதமர் மோடியின் திட்டம்.

இன்னும் இரண்டு மாதங்களில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசியலுக்கு பிரதமர் முற்றுப்புள்ளி வைப்பார்.

இந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தனக்காக வாக்கு கேட்கவில்லை. அமித் ஷாவை பிரதமராக்கவே வாக்கு கோருகிறார். பா.ஜ.க. தலைவர்கள் 75 வயதுக்குப் பிறகு ஓய்வு பெறுவார்கள் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் மோடிக்கு 75 வயதாகிறது. நான் மோடியிடம் கேட்க விரும்புகிறேன் நீங்கள் அமித் ஷாவுக்காக தற்போது வாக்கு கேட்கிறீர்கள்?.” என்று அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அமித் ஷா, ”மக்களவைத் தேர்தல் முடிவில்,பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியே தொடரும். ஐந்து ஆண்டுகள் அவர்தான் நாட்டை வழிநடத்துவார். தலைவர்களின் வயது வரம்பு பற்றி பாஜக விதிகளில் எங்கும் குறிப்பிடவில்லை. இது தொடர்பாக பாஜகவில் எந்தக் குழப்பமும் இல்லை.” என்று அமித் ஷா கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com