நிபா வைரஸ்
நிபா வைரஸ்

நிபா வைரஸ்: கேரளாவில் மருத்துவ மாணவிக்கு தொற்று - தமிழக எல்லையில் உஷார் நிலை!

கேரளத்தில் பல் மருத்துவம் படிக்கும் மாணவிக்கு நிஃபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு - கேரள எல்லையில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இரு மாநில எல்லைகளில் உள்ள 11 சோதனைச்சாவடிகளில் சுகாதாரத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதற்கிடையே, திருவனந்தபுரத்தில் பல் மருத்துவ மாணவர் ஒருவர் இன்று மாலை நிபா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

கேரளத்தில் நடப்பு நிலவரம் குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இன்று ஊடகத்தினரிடம் பேசுகையில், "கேரளத்திலிருந்து ஐந்து மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. இறந்தவரின் மனைவியின் சகோதரனுக்கும் சிகிச்சையில் உள்ள 9 வயது சிறுவனுக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. மீதி இருவருக்கும் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. இவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் போலீஸ் உதவியுடன் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்றார்.

”நிபா வைரஸ் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்ததாக இதுவரை 168 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 127 பேர் மருத்துவப் பணியாளர்கள். இதுவரை நான்குபேர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.” என்றும் வீணா கூறினார்.

தமிழக எல்லையை ஒட்டிய மாவட்டமான திருவனந்தபுரத்தில் நிபா வைரஸ் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கன்னியாகுமரி - கேரளா எல்லையில் உள்ள 5 சோதனைச்சாவடிகளில் மருத்துவ குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கேரளத்திலிருந்து வரும் வாகனங்களில் காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகளுடன் யாராவது வந்தால், அவர்களிடம் அந்த இடத்திலேயே பரிசோதனை செய்யப்படுகிறது.

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொற்றுநோய் சிகிச்சைக்கென தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com