முதலமைச்சராக பதவி ஏற்கும் நிதிஷ்குமார்
முதலமைச்சராக பதவி ஏற்கும் நிதிஷ்குமார்

காலையில் விலகல், மாலையில் பதவியேற்பு - நிதிஷ்குமார் அதிரடி!

பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் பதவியிலிருந்து இன்று காலை விலகிய நிதிஷ் குமார், ஒரே நாளில் கூட்டணி மாறி, பா.ஜ.க. ஆதரவுடன் மாலையில் மீண்டும் அதே பதவியில் அமர்ந்தார்.

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் இணைந்து மகாகத் பந்தன் என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. ஐக்கிய ஜனதா தளம் தலைவரான நிதிஷ்குமார் மாநில முதலமைச்சராகவும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராகவும் செயல்பட்டு வந்தனர்.

இதனிடையே, நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியை ஒருங்கிணைக்கும் பணியில் நிதிஷ்குமார் ஈடுபட்டு வந்தார். ஆனால், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மாநிலத்தில் கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளுடன் நிதிஷ்குமாருக்கு முரண்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக இந்தியா கூட்டணியில் இருந்து விலக நிதிஷ்குமார் முடிவெடுத்தார்.

அதேபோல், மாநிலத்திலும் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் உள்ள கூட்டணியில் இருந்தும் விலக நிதிஷ்குமார் முடிவெடுத்தார்.

அதன்படி, அக்கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் இன்று காலையில் விலகினார். பின்னர், ஆளுநரைச் சந்தித்த பதவிவிலகல் கடிதத்தையும் நிதிஷ்குமார் வழங்கினார்.

தொடர்ந்து, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திற்கு பா.ஜ.க. ஆதரவு அளித்தது. பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்துடன் ஆட்சியமைக்க நிதிஷ்குமார் ஆளுநரைச் சந்தித்தார். ராஷ்டிரிய ஜனதா தளம் – பா.ஜ.க. கூட்டணி ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், பா.ஜ.க. ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் இன்று பீகாரின் முதலமைச்சராக 9ஆவது முறையாக பதவியேற்றுக்கொண்டார்.

பாட்னாவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், நிதிஷ்குமாருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

பாஜகவைச் சேர்ந்த சாம்ராட் சவுதிரி, விஜய் சின்ஹா ஆகிய இருவரும் துணை முதலமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர்.

அதேபோல், நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியிலிருந்து விலகிவிடுவார் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே முன்னரே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com