தீபாவளி போனஸ் திருப்தி தரவில்லை என்று கூறி, ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்காமல் வாகனங்களை அனுப்பிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பதேஹாபாத்தில் சுங்கச்சாவடி ஒன்று இயங்கி வருகிறது. ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் அமைக்கப்பட்டு உள்ள இந்த சுங்கச்சாவடியில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சுங்கச்சாவடியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தலா ரூ.1100 தீபாவளி போனஸ் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொகை தங்களுக்கு போதுமானதாக இல்லை, அதை உயர்த்தி தர வேண்டும் என்று நிர்வாகத்திடம் ஊழியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
தங்களின் கோரிக்கை ஏற்கப்படாததால் அதிருப்தியில் இருந்த ஊழியர்கள், தாங்கள் பணியாற்றும் சுங்கச்சாவடியில் எந்த கட்டணமும் வசூலிக்காமல் வாகனங்களை இலவசமாக செல்ல அனுமதித்து இருக்கின்றனர்.
கூடுதல் போனஸ் தொகை கோரி, சுங்கச்சாவடி ஊழியர்கள் 21 பேரும் இணைந்து இவ்வாறு செய்வது குறித்து சுங்கச்சாலையை நிர்வகிக்கும் நிறுவன உரிமையாளர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு சென்ற போலீசார், போனஸ் விவகாரம் குறித்து இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதையடுத்து, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மேலும் 10 சதவீதம் கூடுதலாக போனஸ் தொகை தர நிர்வாகம் ஒத்துக் கொண்டது.
இதையடுத்து, போராட்டத்தை சுங்கச்சாவடி ஊழியர்கள் கைவிட்டு பணிக்கு திரும்பினர். 2 மணி நேரம் நீடித்த ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததால், வாகனங்களுக்கு மீண்டும் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.