
பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள், தாமதங்கள் என வெளியான செய்திகளை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) இன்று மறுத்துள்ளது.
புதிய திருத்துதல் முறையால சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தாமதமாகாது; ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி மே மூன்றாவது வாரத்தில் வெளியாகும் என்று தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
புதிய- திரையைப் பார்த்து மதிப்பிடல் (ஆன்ஸ்கிரீன் மார்க்கிங்) முறையின்படி, விடைத்தாள்கள் ஏற்கெனவே ஸ்கேன் செய்யப்பட்டு, தனி சர்வரில் படங்களாக சேமிக்கப்பட்டுவிடும். விடைத்தாள் திருத்தும் ஆசிரியர் அதை அவரவர் பள்ளியில் உள்ள கணினியில் குறிப்பிட்ட கடவுச்சொல் மூலம் பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிலேயே அவர் மதிப்பெண்ணை இடும் முறைதான் இந்தப் புதிய முறை. இதன் மூலம் மதிப்பெண்களைக் கூட்டுவதில் ஏற்படும் பிழைகளைத் தடுக்கவும், ஆட்கள் மூலம் ஏற்படும் தவறுகள், முறைகேடுகளைத் தவிர்க்கவும் முடியும்.
இப்போதைக்கு இந்த ஆண்டில் 12ஆம் வகுப்புக்கு மட்டும் இந்த முறை கொண்டுவரப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வுக்கு ஆசிரியர்கள் தாள்களிலேயே திருத்தும் முறையே தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிறது.