யாராலும் மேகதாது அணையைத் தடுக்க முடியாது - பிரதமர் முன்பே கர்நாடக முதல்வர் பேச்சு!

modi inaugurated bengaluru pink line metro
பெங்களூரு பிங்க் லைன் மெட்ரோவை தொடங்கி வைத்தார் மோடி
Published on: 

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது என்று பிரதமர் மோடி முன்னிலையில், கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் பேசியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ராமநகரம் மாவட்டத்தில், காவிரி, அர்க்கவதி நதிகள் சங்கமிக்கும் மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் 12,500 ஏக்கர் நிலப்பரப்பு, பழங்குடி மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வந்து சேர வேண்டிய காவிரி நீர் முற்றிலும் கர்நாடகாவின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், காவிரி வடிநிலப் பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளுக்கான நீர்வரத்தும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில், மேகதாது அணை கட்ட அனுமதி தரக்கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், பெங்களூரில் இன்று பிங்க் மெட்ரோ சேவை, பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கும் நிகழ்வில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

பிரதமர் மோடி முன்னிலையில், கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் பேசியதாவது:

" தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன், மேகதாது அணை கட்ட உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளது. கர்நாடகாவின் குடிநீர்த் தேவைக்காகவும் மின் உற்பத்திக்காகவும் கட்டப்படும் இந்த சமநிலை நீர்த்தேக்கத்தால், கர்நாடகத்தைவிட தமிழகத்திற்கே அதிக நன்மை கிடைக்கும்.

மேகதாது அணை கட்டுவதற்காக மூழ்கும் வனப்பகுதிக்கு, மாற்று நிலம் அடையாளம் காணப்பட்டு, வனத்துறையிடம் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேகதாது அணை கட்ட உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளதால், அணைக் கட்டத் தேவையான அனைத்து முன்னெடுப்புகளிலும் மத்திய அரசு, கர்நாடகத்திற்கு உதவி புரிய வேண்டும். மேகதாது அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது." என்று டி.கே. சிவக்குமார் பேசினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram