சிம்லாவில் உள்ள ராமர் கோயிலில் சாய்பாபா சிலை வைக்கப்பட்டிருந்ததால் அதிர்ச்சியடைந்த ஜோதிஷ் பீடத்தின் சங்கராச்சாரியார், அங்கு நடைபெற இருந்த நிகழ்ச்சியை ரத்து செய்ததோடு, இந்து கோயிலில் சாய்பாபாவுக்கு இடமில்லை என்று கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு இந்து கோவில்களில் சாய்பாபா சிலை உள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் வாரணாசியில் உள்ள பல கோயில்களில் இருந்த சாய்பாபா சிலையை இந்து அமைப்பினர் அகற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், உத்தரகாண்ட் ஜோதிஷ் பீட சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி நேற்று சிம்லாவில் உள்ள ராமர் கோயில் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுள்ளார். அப்போது அவரிடம் ராமர் கோயில் சாய்பாபா சிலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் ராமர் கோயிலுக்கு செல்வதை புறக்கணித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “சாய்பாபாவுக்கு இந்து கோயில்களில் இடமில்லை. இந்து கோயில்களில் அவரது பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை. கோயில் அர்ச்சகர்கள், அறங்காவலர்கள் பணம் சம்பாதிப்பதற்காக சாய்பாபா சிலையை நிறுவியுள்ளனர்.
எங்கள் கடவுளின் கோயிலுக்குள் சாய்பாபாவின் சிலையை வைத்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் செயலை கண்டிக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
சாய்பாபாவின் சிலை கோயிலுக்கு வெளியே நிறுவப்பட்டுள்ளதாகவும், அந்த சிலைக்கு எதுவும் பூஜை செய்யப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. சாய்பாபாவின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டால்தான், ராமர் கோயிலுக்கு வருவேன் என சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி கூறியுள்ளார்.