இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

காணாமல் போகவில்லை, இருக்கிறோம்! – தேர்தல் ஆணையர் விளக்கம்

தேர்தல் ஆணையத்தைக் காணவில்லை என்று சமூக ஊடகத்தில் எழுந்த விமர்சனத்துக்கு இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பதிலளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், தேர்தல் ஆணையர்கள் இன்று புது டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட விதம், வாக்களித்த மக்களின் எண்ணிக்கை, பணியில் ஈடுபடுத்தப்பட்ட பணியாளர் எண்ணிக்கை என பல்வேறு தகவல்களைத் தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

அப்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், ”நாங்கள் எங்கும் காணாமல் போகவில்லை. இங்குதான் இருக்கிறோம். தேர்தல் ஆணையம் காணாமல் போனதாக சமூக ஊடகங்களில் வெளியான மீம்ஸ்களை நாங்கள் பார்த்தோம்.” என்றார்.

இந்தத் தேர்தலில் 64.2 கோடி பேர் வாக்களித்துள்ளதாகவும் இதில், 31.2 கோடி பேர் பெண்கள் என்றும் அவர் கூறினார்.

தேர்தல் பரப்புரையைத் தொடர்ந்து தாங்கள் கண்காணித்ததாகவும் தேர்தல் நடத்த விதிமீறல் தொடர்பாக வந்த 495 புகார்களில் 90 சதவீதம் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியவர், மிகப்பெரிய அளவில் வன்முறையே நடைபெறாத தேர்தலாக இந்த மக்களவைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என பெருமிதம் தெரிவித்தார்.

நாளை நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

செய்தியாளர் சந்திப்பின்போது, வாக்களித்த வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள்.

logo
Andhimazhai
www.andhimazhai.com