சர்க்கரை நோயாளிகளுக்கு இனி வாரத்துக்கு 1 இன்சுலின் போதும்!

Insulin injection
இன்சுலின் ஊசி
Published on

இந்தியாவில் முதன்முறையாக வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே செலுத்தவேண்டிய அடிப்படை இன்சுலின் மருந்தான 'அவிக்ளி' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகில் அதிக சர்க்கரை நோய் பாதிப்புகளைக் கொண்ட நாடுகளில் ஒன்று இந்தியா. இந்தியாவில் 10.1 கோடிக்கும் அதிகமான மக்கள் சர்க்கரை நோயுடன் வாழ்ந்து வருகின்றனர், அதே நேரத்தில் மேலும் 13.6 கோடி மக்கள் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டென்மார்க்கைச் சேர்ந்த மருந்து நிறுவனமான நோவோ நோர்டிஸ்க் இந்த புதிய இன்சுலினை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுவரை தினமும் இன்சுலின் ஊசி செலுத்த வேண்டியிருந்த நிலையில், இந்தப் புதிய மருந்தின் மூலம் வாரத்திற்கு ஒரே ஒரு ஊசி செலுத்தினால் போதும்.

இன்சுலின் ஐகோடெக் எனப்படும் 'அவிக்ளி', ஆண்டுக்கு 365 ஊசிகள் என்ற எண்ணிக்கையை வெறும் 52 ஆகக் குறைப்பதன் மூலம் இன்சுலின் சிகிச்சையை எளிதாக்கியுள்ளது.

இந்த மருந்தில் இருக்கும் இன்சுலின் ஐகோடெக், ஆல்புமின் எனும் இரத்தப் புரதத்துடன் ஒன்றிணைவதால் உடலில் நீண்ட நேரம் தங்கும் சக்தியைப் பெற்றுள்ளது. இதனால் ஒரு வாரம் முழுவதும் தனது செயல்பாட்டை செய்யும்.

மேலும், தற்போதுள்ள தினசரி பேசல் இன்சுலின் சிகிச்சைகளுக்கு இணையான அல்லது அதைவிடச் சிறந்த இரத்தச் சர்க்கரைக் கட்டுப்பாட்டை இது வழங்கும் என்று நோவோ நோர்டிஸ்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஊசி பயம், அடிக்கடி மருந்து செலுத்த வேண்டிய சிரமம் போன்ற காரணங்களால் இன்சுலின் சிகிச்சையைத் தாமதப்படுத்தும் நோயாளிகளுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய மருந்து டைப்-1, டைப்-2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com