வெறும் 4%  மட்டும்தான் ஓபிசி பேராசிரியர்களாம்!
Office

வெறும் 4% மட்டும்தான் ஓபிசி பேராசிரியர்களாம்!

45 மத்திய பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் பேராசிரியர்களில் 4 % பேராசிரியர்களும், 6% இணை பேராசிரியர்கள் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என மத்திய கல்வி துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மத்திய பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டு பிரிவினர்களின் பிரதிநிதித்துவம் குறித்த கேள்விக்கு மத்திய கல்வித் துறை இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் மக்களவையில் பதிலளித்தார். அதில் 45 மத்திய பல்கலைக்கழகங்களில் 4 சதவீத பேராசிரியர்கள் மற்றும் 6 சதவீத இணை பேராசிரியர்கள் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட பேராசிரியர்கள் மற்றும் இணை பேராசிரியர்களின் எண்ணிக்கை பட்டியலினத்தை சேர்ந்தவர்களை விட குறைவாகவே உள்ளது என்றும் மத்திய கல்வித் துறை இணையமைச்சர் அளித்த புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதேநேரத்தில் 85 சதவீத பேராசிரியர்கள் மற்றும் 82 சதவீத இணை பேராசிரியர்கள் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 45 மத்திய பல்கலைக்கழகங்களில் ஐந்து துணை வேந்தர்கள் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் மத்திய கல்வித் துறை இணையமச்சர் சுபாஷ் சர்க்கார் கூறியுள்ளார். இதையடுத்து மத்திய பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தகுதியான இதர பிற்படுத்தப்பட்டவர்கள் மத்திய பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க முடியாத சூழலை கிரீமி லேயர் கட்டுப்பாடு உருவாக்கி உள்ளது. கிரிமி லேயருக்கான வருமான உச்சவரம்பை 8 லட்சத்திலிருந்து 15 லட்சத்திற்கு உயர்த்த வேண்டும். அரசு ஊழியரின் பிள்ளைகள் இதனால் பாதிக்கப்படுவதாக இதர பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலசங்கங்களின் அகில இந்திய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com