எல்-1 புள்ளியை நோக்கி பயணத்தைத் தொடங்கிய ஆதித்யா விண்கலம்
எல்-1 புள்ளியை நோக்கி பயணத்தைத் தொடங்கிய ஆதித்யா விண்கலம்இஸ்ரோ

புவி வட்டத்திலிருந்து விடுபட்டு, சூரியனை நோக்கி ஆதித்யா விண்கலம்!

ஆதித்யா எல்-1 விண்கலம் புவி வட்டப்பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு சூரியனின் எல்-1 புள்ளியை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் வடிவமைத்தது. இந்த விண்கலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 2ஆம் தேதி பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

விண்கலத்தில் உந்து விசை இயக்கப்பட்டு அதன் புவி வட்டப்பாதை தொலைவு படிப்படியாக நான்கு முறை அதிகரிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 2 மணிக்கு மேல் ஆதித்யா விண்கலத்தின் சுற்றுப்பாதை அதிகரிக்கப்பட்டதுடன், புவிவட்டப் பாதையில் இருந்தும் அது வெற்றிகரமாக விலக்கப்பட்டது.

சுமார் 110 நாள்கள் பயணத்துக்குப் பின்னர் புவியிலிருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள ’இலக்ராஞ்சியன் புள்ளி’ (எல்-1)யில் அது விண்கலம் நிறுத்தப்படும். பின்னர் விண்கலமானது தன் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com