பங்குனி ஆமை
பங்குனி ஆமை

5 ஆயிரம் கி.மீ. பயணம்செய்த பங்குனி ஆமை- அரபுக் கடல் முதல் வங்கக் கடல்வரை...!

கடற்கரையில் முட்டை இட்டுவிட்டு இரை தேடச் செல்லும் பங்குனி ஆமை எனப்படும் கடல் ஆமை வகைகள் 200 நாள்களைக் கடந்து, பல ஆயிரம் கி.மீ. தொலைவுக்குப் பயணம் செய்வதை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகளில் முட்டையிட்டு விட்டு இரைக்காக பங்குனி ஆமைகள் கடலுக்குள் போவது வழக்கம். இந்த வகை ஆமைகள் தாம் பிறந்த கடற்கரையிலேயே முட்டையிடுகின்றன என்றும் ஏற்கெனவே முட்டையிட்டுச் சென்ற கரைக்கே மீண்டும் வந்து முட்டையிட்டுச் செல்வதாகவும் கூறப்படுகிறது. இப்படிச் செல்லும் ஆமைகள் தொடர்பாக கடல் உயிரியல் ஆய்வாளர்கள் ஆய்வுசெய்து வருகின்றனர்.

குறிப்பாக, நவம்பர் முதல் ஏப்ரல்வரை இந்தியக் கடலோரங்களில் இந்த ஆமைகள் கூட்டமாக வந்து முட்டையிட்டுச் செல்வதைப் பார்க்கமுடியும். கடற்கரைப் பகுதிகளில் சிறு குழியைப் பறித்து, அதில் முட்டைகளை இட்டுவிட்டு பங்குனி ஆமைகள் மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும். ஐம்பது அறுபது நாள்களில் அந்த முட்டைகள் பொரித்து ஆமைக் குஞ்சுகள் வெளியேவரும்.

சில மாதங்களுக்கு முன்னர் மகாராஷ்டிர கடற்கரையில் முட்டையிட வந்த பங்குனி ஆமைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றில் டிரான்ஸ்மீட்டரைப் பொருத்தி கடலுக்குள் விட்டனர். டேராடூன் காட்டுயிர் ஆய்வு நிறுவனமும் மகாராஷ்டிர வனத் துறையும் இணைந்து இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளன. கடந்த ஆண்டில் எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்த நிலையில், இந்த ஆண்டு ஆய்வில் நல்ல சேதி கிடைத்துள்ளது.

சிந்துதுர்க் கடற்கரை அமைந்திருக்கும் அரபுக்கடல் பகுதியிலிருந்து 200 நாள்களைக் கடந்து பாகேஸ்ரி என்ற பங்குனி ஆமை 5 ஆயிரம் கி.மீ. தொலைவு பயணத்தைத் தொடர்ந்துவருகிறது. அந்த ஆமை வங்கக் கடலில் இப்போது தன் இரை தேடும் பயணத்தில் இருக்க... அதனுடன் இணைந்து அனுப்பப்பட்ட குகா என்ற ஆமை மேற்குக் கடலோரமான மலபார் கடல் பகுதியில் பயணத்தில் இருக்கிறது.

மகாராஷ்டிர மாநில வனத் துறையின் மாங்குரோவ் பவுண்டேசன் ஆய்வுப்பிரிவு துணை இயக்குநர் மனஸ் மஞ்ச்ரேக்கர் மகிழ்ச்சியோடு இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் பங்குனி ஆமைகளின் பயணம் பற்றிய இந்த ஆய்வு கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டது. முதலில் ஐந்து ஆமைகளின் முதுகில் டிரான்ஸ்மீட்டர்கள் பொருத்தப்பட்டு, ஓராண்டுக்கு அவற்றின் நகர்வைக் கண்காணிக்கும் பணி தொடங்கியது.

ஆனால் ஒரு டிரான்ஸ்மீட்டர் செயல்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டது. மற்ற நான்கும் அந்தந்த ஆமைகளின் நகர்வைக் காண்பித்தன. நூறு நாள்களுக்குப் பிறகு, அந்த ஆமைகளின் மீது பொருத்தப்பட்ட டிரான்ஸ்மீட்டர்கள் ஒவ்வொன்றாக செயல் இழந்தன. 121ஆவது, 128ஆவது, 132ஆவது, 173ஆவது நாள்களில் அவை செயலிழந்தன. அப்போது அந்த ஆமைகள் மகாராஷ்டிரா, கோவா, கர்நாடக கடற்கரைகளில் இருந்தன என்கிறார், இந்திய காட்டுயிர் ஆய்வுநிறுவனத்தின் இயக்குநர் வீரேந்திர திவாரி.

டிரான்ஸ்மீட்டர்கள் செயலிழப்புக்குக் காரணம், பேட்டரி சார்ஜ் தீர்ந்ததுதான் என்கிறார் மனஸ்.

செயற்கைக்கோள் டிரான்ஸ்மீட்டர் நிறுவனமான நியூசிலாந்து நிறுவனம் மூன்றுக்கு மாற்றுகளைத் தந்தது. அந்த மாற்று டிரான்ஸ்மீட்டர்கள்தான் பாகேஸ்ரி, குகா ஆமைகளின் மீது கடந்த பிப்ரவரியில் பொருத்தப்பட்டன.

அவை இரண்டும்தான் இப்போது கடல் உயிரியல் ஆய்வாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் செய்தியை அளித்திருக்கின்றன.

logo
Andhimazhai
www.andhimazhai.com