அடடே..மோடியும் ராகுலும் சேர்ந்து செய்த காரியம்!

மக்களவைத் தலைவராக செய்யப்பட்டுள்ள ஓம் பிர்லா!
மக்களவைத் தலைவராக செய்யப்பட்டுள்ள ஓம் பிர்லா!
Published on

மக்களவைத் தலைவராக ஒம் பிர்லா இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரை பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அழைத்து வந்து மக்களவைத் தலைவர் இருக்கையில் அமரவைத்தனர். இதன்மூலம் கடந்த 25 ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களவை தலைவராகத் தேர்வானவர் என்ற பெருமையை ஓம் பிர்லா பெற்றுள்ளார்.

முன்னதாக, மக்களவை தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஓம் பிர்லாவின் பெயரை அவையில் முன்மொழிந்தார் பிரதமர் மோடி. பிரதமரால் முன்மொழியப்பட்ட ஓம் பிர்லாவின் பெயரை பா.ஜ.க. கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் வழிமொழிந்தனர்.

அதேபோல் சபாநாயகர் பதவிக்கு இந்தியா கூட்டணி வேட்பாளராக கொடிக்குன்னில் சுரேஷின் பெயரை சிவசேனை (உத்தவ் தாக்கரே) எம்.பி. அரவிந்த் சவந்த் முன்மொழிந்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில், ஓம் பிர்லா 2ஆவது முறையாக மக்களவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

48 ஆண்டுகளுக்கு பிறகு மக்களவைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டதில், ஓம் பிர்லா தேர்வாகினார். அவரை இருக்கைக்கு அழைத்துச் செல்லும்போது பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் மகிழ்ச்சியாக கைகுலுக்கினர்.

ஓம் பிர்லா
ஓம் பிர்லா

யார் இந்த ஓம் பிர்லா?

மக்களவைத் தலைவராக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள ஓம் பிர்லா நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர். 1962 இல் பிறந்த ஓம் பிர்லா ராஜஸ்தானில் உள்ள கோட்டா பகுதியைச் சேர்ந்தவர். மாணவ பருவத்திலிருந்தே அரசியலில் ஈடுபடத் தொடங்கியவர் மாணவர் அமைப்பின் தலைவராகவும் இருந்துள்ளார்.

அரசியல் அறியலில் பட்டம் பெற்ற ஓம் பிர்லா, விவசாயியாகவும் சமூக சேவகராகவும் இருந்துள்ளார். இளம் வயதிலேயே பா.ஜ.க.வில் இணைந்த ஓம் பிர்லா, கோட்டா மாவட்ட பா.ஜ.க.வின் இளைஞர் அணித் தலைவராகவும், பின்னர் அதன் மாநிலத் தலைவராகவும் இருந்தவர். 1997 முதல் 2003 ஆம் ஆண்டு வரை பா.ஜ.க.வின் இளைஞர் அணி தேசிய துணைத் தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.

ஓம் பிர்லா, முதல் முறையாக கோட்டா தெற்குத் தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரானார். தொடர்ந்து மூன்று முறை (2003, 2008, 2013) சட்டமன்ற உறுப்பினர் பதவி வகித்த ஓம் பிர்லா, கடந்த 2019 ஆம் ஆண்டு கோட்டா மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு முதல் முறையாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். தற்போது இரண்டாவது முறையாகவும் அதே தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வாகி இருக்கிறார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு 17 ஆவது மக்களவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லா, ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து அந்த பதவிக்கு வந்த முதல் எம்.பி. என்ற பெருமையையும் பெற்றவர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com