இங்கே டிரில்... அங்கே ரியல்... பாகிஸ்தானில் இந்தியா நடத்திய துல்லிய தாக்குதல்!

இங்கே டிரில்... அங்கே ரியல்... பாகிஸ்தானில் இந்தியா நடத்திய துல்லிய தாக்குதல்!
Published on

ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானிலும் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள 9 இடங்களில் இயங்கிய பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தியதாக இந்தியா தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் என்ற இடத்தில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டு இரண்டு வாரங்கள் கழித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் பஹவால்பூர் என்ற இடமும் அடங்கும். இது ஜெயிஷ் இ முகமது என்ற ப்யங்கரவாத அமைப்பின் முக்கிய தளங்களில் ஒன்றாகும்.

இன்று முன்காலை 1.44 மணிக்கு இந்த தாக்குதல்கள் குறித்த தகவலை இந்திய ராணுவம் செய்திக்குறிப்பொன்றில் வெளியிட்டது.

’ இந்தியாவுக்கு எதிரான தாக்குதலைத் திட்டமிட்டுச் செயல்படுத்திய பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது சற்று நேரம் முன்பாக துல்லியதாக்குதல் நடத்தப்பட்டது. இது குறிவைத்து, கணக்காக, பிரச்னையை பெரிதாக்கும் நோக்கத்தில் அல்லாமல் செய்யப்பட்ட தாக்குதல். பாகிஸ்தானின் எந்த ராணுவ முகாமும் தாக்கப்படவில்லை. இலக்குகளைத் தேர்வதிலும் தாக்குதல் முறைகளிலும் இந்தியா மிகுந்த கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்துள்ளது’ என்ற அந்த குறிப்பு கூறுகிறது.

ஏப்ரல் 29 ஆம் தேதி நடந்த உயர்மட்ட ஆலோசனையின் போது பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்துக்கு முழுமையான செயல்பாட்டு சுதந்தரத்தை பிரதமர் மோடி வழங்கி இருந்தார்.

ஆபரேஷன் சிந்தூர் குறித்த மேலதிக தகவல்களை பிறகு தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தேசிய அளவில் பாதுகாப்பு ஒத்திகை அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஆபரேஷன் நடந்துள்ளது.

‘இந்திய எல்லையில் இருந்து மூன்று ஏவுகணைகள் பாகிஸ்தானுக்குள் வீசப்பட்டன. பாகிஸ்தான் இத்தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும்’ என பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்.ஜெனரல் அகமது ஷெரிப் சௌத்ரி என்பவர் செய்தி சானல் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com