காலரா நோய்க்கு வாய்வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக அதை தயாரித்துள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘ஹில்சோல்’ எனப்படும் இந்த தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனை வெற்றிகரமான முடிவை தந்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
காலரா என்பது விப்ரியோ காலரா என்கிற பாக்டீரியாவால் ஏற்படும் நோய். மாசுபட்ட குடிநீர், உணவு, மோசமான சுகாதாரம், நெருக்கமான வாழ்க்கை சூழல் ஆகியவற்றால் ஏற்படும் கடுமையான வயிற்றுப்போக்கு தொற்று. உலகில் ஆண்டுதோறும் 2.86 மில்லியன் பேர் பாதிப்படைவதாகவும், 95,000 மேற்பட்டோர் இறப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் மட்டும் 20,000க்கும் மேற்பட்டோர் இந்நோயால் ஆண்டுதோறும் இறக்கின்றனர்.
ஓகாவா,இனாபா ஆகியவை காலாராவை ஏற்படுத்தும் பாக்டீரியா இனமான விப்ரியோ காலரா கிருமியின் இரண்டு வகைகள் ஆகும். இவ்விரண்டிற்கும் எதிரான தன்மைகளை இந்த தடுப்பு மருந்து கொண்டுள்ளது.
இதன் முதல், இரண்டாம் கட்ட சோதனை பங்களாதேஷில் நடைபெற்றதை தொடர்ந்து இந்தியாவில் மூன்றாம் கட்ட சோதனை 3600 நபர்களிடம் விருப்பத்தின் பேரில் செய்யப்பட்டது.