
சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த 10 மாத பெண் குழந்தையின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கோட்டயம் நகரில் பல்லம் என்ற இடத்தில் கடந்த 5ஆம் தேதி சாலை விபத்து ஒன்று ஏற்பட்டது. அதில், பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாத பெண் குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம் படுகாயமடைந்தார். அந்த குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் மூளைச் சாவு அடைந்ததாக மருத் ஊதுவர்கள் அறிவித்தனர். இதையடுத்து, மருத்துவர்கள் குழந்தையிடமிருந்து கல்லீரல், 2 சிறுநீரகங்கள், இதய வால்வு, 2 கண்கள் ஆகியவற்றை தானமாக பெற்றனர். இதைத் தொடர்ந்து குழந்தையின் கல்லீரல், திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் உள்ள 6 மாதக் குழந்தைக்குப் பொருத்தப்பட உள்ளது.
சிறுநீரகங்கள், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் உள்ள மற்றொரு குழந்தைக்கு வழங்கப்பட்டது. இதய வால்வு மற்றும் கண்கள், சித்ரா இன்ஸ்டிடியூட் மற்றும் அமிர்தா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு தானமாக வழங்கப்பட்டன.
இதன் மூலம் கேரளாவிலேயே மிகக் குறைந்த வயதில் உடல் உறுப்பு தானம் செய்த பெருமை அலின் ஷெரினுக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து ஷெரின் தொடர்பான செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.
இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறும்போது, “குழந்தை இறந்த துக்கத்தில் இருந்தபோதும், குழந்தையின் உறுப்புகளை பெற்றோர் தானமாக அளித்தது பாராட்டுக்குரியது. துயரத்தில் இருக்கும் குடும்பத்துக்கு மாநில அரசு துணை நிற்கிறது. அவர்களின் செயல் கேரளாவில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தியுள்ளது’’ என்றார்.