சமீர் கான் - ஜவேரியா
சமீர் கான் - ஜவேரியா

'எல்லை கடந்த' காதல்…ஆச்சரியப்பட வைத்த பாகிஸ்தான் இளம் பெண்!

அடடா… இந்த காலத்தில் இப்படியொரு பெண்ணா! என்று ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் ஜவேரியா. அவர் ‘பார்டரை’ தாண்டி வந்து ‘பார்ட்னரை’ சந்திருப்பது இந்தியர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த ஜவேரியாவின் புகைப்படத்தை தனது தாயின் செல்போனில் பார்த்துள்ளார் கொல்கத்தாவைச் சேர்ந்த சமீர் கான். 21 வயதான ஜவேரியாவை புகைப்படத்தில் பார்த்ததுமே காதல் வயப்பட்ட சமீர் கான் தன்னுடைய விருப்பத்தை அம்மாவிடம் தெரிவித்திருக்கிறார். சமீர் கானின் தாய்வழி உறவினர் அஸ்மத் இஸ்மாயில் கான் என்பவரின் மகள்தான் ஜவேரியா. சமீர் கான் தன்னுடைய காதலை அவரிடம் சொல்ல, அவரும் காதலை ஏற்றுக் கொண்டுள்ளார். இருவீட்டாரும் இவர்களின் திருமணத்துக்குப் பச்சைக்கொடி காட்ட, அவர்களது நிச்சயதார்த்தம் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆனால் இருவரும் நேரில் சந்திக்க ஐந்தரை ஆண்டுகள் ஆகியிருப்பதுதான் இதில் வியப்பே!

ஜவேரியா இந்தியா வருவதற்கான விசா கோரிக்கை, இருமுறை இந்திய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில்தான் பஞ்சாபை சேர்ந்த மக்பூல் அகமது என்ற சமூக சேவகரின் உதவியால் ஜவேரியா கானுமுக்கு தற்போது 45 நாள் விசா வழங்கப்பட்டுள்ளது.

விசா கிடைத்த கையோடு ஜவேரியா வாகா எல்லை வழியாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசுக்கு நேற்று வந்தடைந்தார். அவரை வாகா எல்லையில் வருங்கால கணவர் சமீர் கானும், அவரது பெற்றோரும் மேளதாளம் முழங்க வரவேற்றுள்ளனர். இந்தியா வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறிய ஜவேரியா, அதற்கு அனுமதி வழங்கிய இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சமீர் கானை திருமணம் செய்துக் கொண்டு இந்தியாவிலேயே நிரந்தரமாக இருக்க விரும்புவதாகவும் ஜவேரியா கூறியுள்ளார்.

கடவுளிடம் தாங்கள் வைத்த வேண்டுகோள் நிறைவேறிவிட்டதாகவும், திருமணப் பந்தத்தில் இணையும் தங்களின் கனவு நனவாகும் தருணம் வந்துள்ளதாகவும் சமீரும் – ஜவேரியும் மகிழ்ச்சி பொங்க ஊடகங்களுக்குப் பேட்டிக் கொடுத்துள்ளனர்.

இவர்களின் திருமணம் அடுத்த மாதம் 6ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு, ஜவேரியா கானுமின் 'விசா'வை நீட்டிக்க இந்திய அரசுக்கு விண்ணப்பம் அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

கௌதம் மேனன் திரைப்படங்களில் வரும் நாயகர்கள் தங்களின் காதலியைத் தேடி மாநிலம் விட்டு மாநிலம், கண்டம் விட்டு கண்டம் செல்வதுபோல் அல்லாமல், பெண் ஒருவர் தன் காதலனைத் தேடி வந்திருப்பது, ஜவேரியா – சமீர் காதலின் வலிமையை உணர்த்துகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com